கோயம்புத்தூர் மாவட்டம், கோவை மாநகராட்சிக்கு கீழ் வரும் வடவள்ளியில் இருந்து மருதமலை முருகன் கோவில் செல்லும் சாலை, பணிகள் முடிவடையாமல் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் அதில் பயணிப்போர் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.
இது கோயம்புத்தூரின் பிரதான சாலைகளில் ஒன்றாகும். பாரதியார் பல்கலைக்கழகம், கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், அரசு சட்டக்கல்லூரி என வரிசையாக மூன்று கல்வி நிறுவனங்கள் இருக்கும் சாலை என்பதால் கல்லூரி மாணவர்கள் மட்டும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள்.
மருதமலை முருகன் கோவிலுக்கும் இந்த சாலையில் தான் செல்ல வேண்டும் என்பதால் பக்தர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் இந்த சாலையில் தான் பயணம் செய்கிறார்கள்.
நிலத்தடி கழிவுநீர் அமைப்புக்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்களாக சாலை பணிகள் நிறைவடையாமல் மேடும் பள்ளமுமாக இருப்பதால் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் பலரும் விபத்துக்கு உள்ளாகின்றனர்.




மழை நேரங்களில் சாலை முழுவதும் சேரும் சகதியுமாக இருப்பதால் பேருந்துகளும், கனரக வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகுவதால் காலை நேரங்களில் பணிகளுக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து சாலை ஓரமாக இட்லி கடை நடத்தும் அக்காவிடம் பேசியபோது, “இரண்டு மாசமா இதே நிலை தான் பா, கடைக்கு வரவங்கனால நிம்மதியா சாப்பிட்டு போக முடியல, சாப்பாடு முழுக்க தூசி வந்துடுது. பலருக்கு சுவாச பிரச்சனையே வந்துருச்சு. அதிகாரிகள்டையும் இது பத்தி சொல்லிட்டோம், ஆனா இன்னும் இந்த ரோட்டு பிரச்சனை சரியான மாதிரி தெரியல” என்றார்.
மருதமலை, தொண்டாமுத்தூர் செல்ல நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இந்த வழியில் தான் செல்வதால் பேருந்து ஓட்டுனர்களும் அவதிக்கு ஆளாகின்றனர்.
“கோவையின் முக்கிய சாலைக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பகுதிகளுக்கு என்ன நிலமையாக இருக்கும், சீக்கிரம் இந்த ரோட்டை சரி பண்ண சொல்லுங்கள்” என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ள முயன்றும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
மாணவர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்தச் சாலை, இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படியே இருக்கும் என்பதுதான் அப்பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.
கழிவுநீர் பணிகள் முடிந்த பிறகு சாலையை முழுமையாகச் சீரமைப்பதற்கான காலக்கெடு என்ன, பணிகள் எப்போது நிறைவடையும் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவான பதில் அளிக்க வேண்டியிருக்கிறது.







பள்ளங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனமும், இந்தச் சாலைப் பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.
இந்த சாலையில் இரு சக்கர வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக சேவை அமைப்பினர்களும், பொதுமக்களும் பல முறை புகார் அளித்தும் அரசு தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
விபத்துகள் நடந்த வண்ணமே இருக்கும் இந்தச் சாலையை, அதிகாரிகள் உடனடியாகச் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

























My reading list is short and selective and this site is now on it, and a stop at pruneoval confirmed…