திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகம் தற்போது திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறும்போது, “ பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தேர்வு செய்திருந்தாலும், அங்குள்ள விவசாயிகள் மத்தியில் அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது
மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, அதற்கு மாற்றாக மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்திலேயே 5-வது முனையம் (Terminal 5) கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என புதிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் இடவசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இதில் உரிய முடிவை எடுக்க வேண்டும்.
சென்னை நகரின் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்ய மற்றொரு முனையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். பரந்தூர் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளே இணைந்து இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
மேலும், மீனம்பாக்கத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே இந்திய விமான நிலைய ஆணையத்தின் வசமே நிலம் உள்ளதால், புதிய நிலத்தைக் கையகப்படுத்துவதில் பெரிய சிக்கல் இருக்காது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தி மீனம்பாக்கத்திலேயே கூடுதல் முனையம் கொண்டுவருவதே உகந்ததாக இருக்கும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் சாலை இணைப்பு ஆகியவை மிகவும் அத்தியாவசியமானது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தொழிற்பாதைகள் (Industrial Corridors) அமைப்பதற்கும், சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் உரிய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓசூர் போன்ற முக்கிய தொழில் மையங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பேசியபோது, பெங்களூருவுக்கு அருகாமையில் உள்ள தொலைவு மற்றும் விதிகளின்படி ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குச் 10 ஆண்டு கால அவகாசம் தேவைப்படுவதாகத் தகவல்கள் உள்ளது.

சட்டரீதியான தடைகள் இல்லாத இடங்களில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பெங்களூரு – ஓசூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்ட முயற்சிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் தேவைகளை உணர்ந்து இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.
சேலம் இரும்பு ஆலையில் இருந்து வரும் இரும்பு மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட சரக்குகளைக் கேரளாவுக்குக் கொண்டு செல்லும் சரக்கு ரயில்கள், திண்டுக்கல் ரயில் நிலையத்திற்குள் வந்து இன்ஜினை மாற்றிச் செல்வதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வாகவே எரியோடு – அக்கரப்பட்டி இடையே சரக்கு ரயில்களுக்கான தனி புறவழித்தடம் அமைப்பதற்கான முதற்கட்ட வான்வழி சர்வே (Aerial Survey) பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், இத்திட்டம் தற்போது தொடக்க நிலையிலேயே இருப்பதால், வழித்தட வடிவமைப்பு (Alignment) மற்றும் திட்ட அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வீடுகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அரசுப் பொதுக் கட்டடங்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழிகள் ஆராயப்பட்டு, மொத்தம் 100 அடி அளவிலான நிலம் மட்டுமே இதற்காகப் பயன்படும்.
திட்ட அறிக்கை மற்றும் சாத்தியக்கூறு ஆய்வு முடிவடைந்த பிறகு, பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, பெரும்பான்மை மக்களின் ஒப்புதல் பெற்ற பிறகே பணிகள் தொடங்கும். அத்துடன், பயணிகள் ரயில்கள் அனைத்தும் எப்போதும் போல திண்டுக்கல் நகருக்குள் வந்து செல்வது உறுதி செய்யப்படும். இந்த புதிய வழித்தடத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாது.

அரசிடம் உண்மையான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் இருக்கும்பட்சத்தில் அதன் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோப்புகளைக் காட்டி மிரட்டுவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ விடுத்து, உரிய நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
சட்டமன்றக் கூட்டத்தொடரை மக்களுக்குப் பயனுள்ள வகையில் நடத்த வேண்டும். தொகுதிப் பிரச்சனைகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, விவசாயம் மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதங்கள் அமைய வேண்டும்.
அரசியல் போட்டிகளையும் மோதல்களையும் பொதுவெளியில் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சட்டப்பேரவையை அதற்கான களமாக மாற்றக்கூடாது.நேரலையில் நிகழ்வுகளைக் கவனித்து வரும் பொதுமக்கள் மக்கள் பிரச்னைகளைப் பேசாததற்கு உரிய எதிர்வினையாற்றுவார்கள்” என தெரிவித்தார்.























