"மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" - சொல்கிறார் கே.எல்.சுதீஷ்

[ad_1]

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தென் மாநிலங்களிலிருந்து புதிதாக பொறுப்பேற்ற எம்.பி-க்களின் வருகைப்பதிவு, கேள்விகள் மற்றும் விவாதப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறார் தே.மு.தி.க பொருளாளர் எல்.கே.சுதீஷ்! அவரிடம் நடப்பு விஷயங்கள் குறித்தான கேள்விகளுக்கு பதில் கேட்டுப் பேசியபோது…

“முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் மாநிலங்களவை உறுப்பினராக சென்றிருக்கிறீர்கள். எப்படியிருக்கிறது இந்த அனுபவம்?”

“நான் எம்.பி-யாக பதவியேற்று முதல் கூட்டத்தில், ஒருநாள் கூட விடுபடாமல் அனைத்து நாட்களிலும் பங்கேற்றுள்ளேன். மொத்தம் 75 கேள்விகள் கேட்டுள்ளேன். அதில் 26 கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைத்துள்ளது.

காவிரி பிரச்னையைப் பற்றித்தான் முதன்முதலில் பேசினேன். ‘தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்டகால பிரச்னையாக தொடர்ந்துவரும் காவிரி பிரச்னையை மத்திய அரசு தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும்’ என்று நான் பேசியபோது, அவையிலிருந்து கர்நாடக எம்.பி-க்கள் அனைவரும் கோபத்துடன் எதிர்க்குரல் எழுப்பினர்.

ஆனால், தேநீர் இடைவேளையின்போது என் அருகில் வந்தமர்ந்த அந்த கர்நாடக எம்.பி-க்கள் என்னிடம் அன்பாக பேசியதோடு, எனக்கு காபி ஆர்டர் செய்தார்கள். உடனே நான், ‘எனக்கு காபி வேண்டாம். தண்ணீர் போதும்’ என்றேன். உடனே தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுத்தார்கள். அதை வாங்கியதும், ‘இந்த தண்ணியைத்தான் நாங்க கேட்கிறோம். அதைத் தர்றதுக்கு ஏன் இவ்வளவு பிரச்னை பண்ணுறீங்க’ என நான் சொல்ல… எல்லோருமே சிரிச்சுட்டாங்க.”

“போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தீர்களே…?”

“ஆமாம்… நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜீரோ நேரத்தின்போது, போதை ஒழிப்பு தொடர்பாக நான் பேசியிருந்தேன். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்கவே போதை கலாச்சாரம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது. போக்ஸோ வழக்குகள் அதிகரித்திருப்பதன் பின்னணியிலும் போதைப் பொருள் புழக்கம் இருக்கிறது.

கே.எல்.சுதீஷ்

போதை புழக்கம் விவகாரத்தில், மாநில அளவில் ஆட்சி செய்த, ஆட்சி செய்துகொண்டிருக்கிற கட்சியினரை நாம் குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாட்டின் எல்லையிலேயே போதைப் பொருள் ஊடுருவாவண்ணம் இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும்.”

“வேலூரில் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறீர்களே… பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு மாற்றாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறதா?”

“பரந்தூர் திட்டம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், வேலூரில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படவேண்டும் எனக்கோரி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து மனு கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் துறை சார்ந்த அதிகாரிகளோடு இதுகுறித்து ஆய்வு செய்த அமைச்சர், ‘இதுதொடர்பாக நாங்களும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி ஏற்பாடுகளை செய்கிறோம். நீங்களும் தமிழ்நாடு முதல்வரிடம் பேசி 100 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர ஏற்பாடு செய்யுங்கள்’ எனக்கூறியுள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் இதுகுறித்துப் பேசுவதற்காக தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளேன். முதல்வர், நிலம் ஒதுக்கித் தருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.”

“மேகதாது அணை விவகாரத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நேரில் மத்திய அமைச்சரையும் சந்தித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறீர்கள். ஆனாலும் இவ்விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தானே செயல்பட்டு வருகிறது?”

“மத்திய அரசுக்கு ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் மேகதாது அணை பிரச்னை. நமக்கு இது அத்தியாவசியமான பிரச்னையாக இருப்பதால், நாம்தான் இதில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

மேகதாது அணை

அண்மையில்கூட, தென் மாநிலங்களின் வசதிக்காக உச்ச நீதிமன்ற கிளை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்களவையில் முன்வைத்தேன். அப்போதே, மேகதாது அணை விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆனாலும் அதை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதுபோன்று நீதிமன்ற ஆணையே மதிக்கப்படாத சூழல்களில் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யவேண்டும் என்பதையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். ஆனாலும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.”

“காவிரி, மேகதாது பிரச்னையில் எப்போதுதான் தமிழகத்துக்கு தீர்வு கிடைக்கும்?”

“காங்கிரஸும், பா.ஜ.க-வும்தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்துவருகின்றன. இந்த இரண்டு கட்சிகளுமே இவ்விவகாரத்தை ஓட்டரசியலுக்கு பயன்படுத்திக்கொள்கின்றன. எனவேதான் இப்பிரச்னைக்கு தீர்வில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆக, இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன.”

“பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக மத்திய அமைச்சர்களிலிருந்து பிரதமர் வரை அடிக்கடி சந்தித்து கோரிக்கை வைக்கிறீர்களே… எப்படி உடனடியாக அனுமதி கிடைக்கிறது?”

“மெட்ரோ, வந்தேபாரத் ரயில் திட்டங்கள், வேலூர் விமான நிலைய விரிவாக்கம், காவிரி – மேகதாது பிரச்னைகள், போதை ஒழிப்பு என தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகத்தான் நான் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டால், உடனடியாக கிடைத்துவிடுகிறது. அக்கறையாகவும் நம்மோடு விவாதிக்கிறார்கள்.

பிரதமர் மோடி – விஜயகாந்த்

பிரதமர் மோடிக்கும் கேப்டனுக்குமான பல்லாண்டுகால நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அந்த அடிப்படையில் அண்மையில் பிரதமரை நான் சந்தித்தபோது, ‘கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்’ என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறேன்.

டெல்லி அரசியலைப் பொருத்தவரையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்குத்தான் அவ்வளவு எளிதில் நேரம் கிடைக்காது. ஆனால் அவரைச் சந்திப்பதற்கும் எனக்கு உடனடியாக நேரம் கொடுக்கப்பட்டது. சந்திப்பின்போதும் மிகவும் சாதாரணமாக சிரித்தபடி அவர் என்னுடன் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.”

“அண்மையில், ‘நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்’ என தமிழக முதல்வர் விஜய்யை தே.மு.தி.க பொதுச்செயலாளர் எச்சரித்திருக்கிறாரே?”

“தமிழக அரசு, ‘543 நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை அப்படியே தொடரவேண்டும்’ என தமிழக சட்டமன்றம் தீர்மானம் இயற்றியுள்ளது. ஆனால், தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டின்போது, ‘புதிய தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கான விகிதாச்சாரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது’ என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளிக்குள்ளாகவே தமிழக முதல்வர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கக்கூடாது. இது குறித்துதான் எங்கள் பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.”

“புதிய தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு என்ன?”

“புதிய மசோதா நாடாளுமன்றத்தில் எப்போது வரும் என்றே தெரியவில்லை. ஆரம்பகட்டத்தில்தான் இதுகுறித்த விஷயங்கள் இருக்கின்றன என்கிறபோது, இதுபற்றி இப்போது விவாதிக்க தேவையில்லை. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்போதுதான், அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தெரியவரும்.

தே.மு.தி.க-வைப் பொருத்தவரை, புதிய தொகுதி மறுவரையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.”

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed