மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் எத்தனை பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற விபரமும் இடம் பெற்று இருக்கிறது.
நாடு முழுவதும் மாணவர்கள் இல்லாத பள்ளிகள் 5,663 உள்ளன. அவற்றில் 4,133 பள்ளிகள் (சுமார் 73 சதவீதம்) மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளன. இதில் உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு 313 பள்ளிகளில் மாணவர்களே கிடையாது. ஆனால் இப்பள்ளிகளில் 177 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதே போன்று மேற்கு வங்கத்தில் மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் 19,502 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இது தவிர 6769 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார். மேலும் 520 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. 29 சதவீத தொடக்கப்பள்ளிகளிலும், 30 சதவீதம் உயர் தொடக்கப்பள்ளியிலும் முறையே 31,684 மற்றும் 2,058 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட மாணவர்-ஆசிரியர் விகிதம் சரியாக அமையவில்லை.
இது குறித்து மேற்கு வங்க கல்வி அமைச்சர் தீபக் பர்மன் கூறுகையில்,”‘தனியார் பள்ளிகள் தரவுகளைச் சரியாகப் பதிவேற்றவில்லை. இப்பள்ளிகளில் சில, ஆசிரியர்களின் விவரங்களைப் புதுப்பித்திருந்தாலும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றவில்லை.
இதனால், அப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் எனக் காட்டப்படுகிறது. இத்தகைய சிக்கல்களைச் சரிசெய்ய நாங்கள் ஒரு வழிமுறையை உருவாக்கி வருகிறோம்.
அதேவேளையில், கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிலவிய பெரும் ஊழல் காரணமாக ஆசிரியர்கள் எவரும் கிட்டத்தட்ட நியமிக்கப்படவில்லை. நாங்கள் அனைத்து நடைமுறைகளையும் சீர்செய்து வருகிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்தகைய சிக்கல்களைக் களைந்துவிட முடியும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை நிலவுகிறது. இதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு 36 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார்.
மம்தா பானர்ஜி ஆட்சியின் போது, ஆசிரியர் பணி நியமனத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரகம், அப்போதைய கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை இதுபோன்ற ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்தது. இவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர். ஊழல் தொடர்பாக 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை உச்ச நீதிமன்றம் பின்னர் ரத்து செய்தது.
























