தமிழ்நாடு சட்டமன்றம்


எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ’சட்டமன்றம் 2026′ பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)

தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்றன. அவர்களின் ஆட்சியில், சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது தமிழக மக்களுக்கு முழுமையாகத் தெரியாது. அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியக்கூடாது என்ற மனநிலையில்தான் கடந்த காலத்தில் ஆட்சிசெய்த கட்சிகளும் இருந்திருக்கின்றன.
அந்த நிலையை இப்போது த.வெ.க அரசு மாற்றியிருக்கிறது.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் எப்படி செயல்படுகிறார், அமைச்சர்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்படுகிறார்கள், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் என்பதை மக்கள் நேரடியாக, முழுமையாகப் பார்க்கக்கூடிய சூழலை த.வெ.க அரசு உருவாகியிருக்கிறது.
இதுதான் த.வெ.க அரசின் முக்கியமான சாதனை.
“இவங்க சின்னப் பசங்க… அரசியலில் அனுபவம் இல்லாதவங்க… இவங்களுக்கு ஒன்னும் தெரியாது” என்று த.வெ.க-வினரைப் பார்த்து ஆரம்பத்தில் தி.மு.க-வினர் ஏளனம் செய்தார்கள்.
‘தற்குறிகள்’ என்றுகூட வசைபாடினார்கள். ஆனால், தி.மு.க-வினரின் விமர்சனங்களை மக்கள் தூள்  தூளாக்கினார்கள்.  தமிழக வெற்றிக் கழகத்துக்கு  வாக்களித்து, அரியணையில் அமர்த்திவிட்டார்கள்.
த.வெ.க ஆட்சியில், சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ‘முழுமையான நேரடி ஒளிபரப்பு’ என்றதும், தி.மு.க-வினர் அலறுகிறார்கள். ‘எல்லாவற்றையும் நேரடியாக ஒளிபரப்பு செய்தால் எப்படி?’ என்று அவர்கள் புலம்புகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குக்கூட எங்கள் அமைச்சர்கள் தெளிவாகப் பதில் சொன்னார்கள். புள்ளிவிவரங்களுடன் பதில் அளித்தார்கள். எந்தத் துறையைப் பற்றிக் கேள்வி கேட்டாலும், அதற்கான தகவல்களுடன் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு அமைச்சர்கள் தயாராக இருந்தார்கள்.
அதுதான் ஆட்சியின் திறமை.

தமிழ்நாடு சட்டமன்றம்

அதே நேரத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்?
ஓடி வந்து முற்றுகையிடுவது, கோஷம் போடுவது, மேசையைத் தட்டுவது, செல்போனை தூக்கி வீசுவது, கையை நீட்டி மிரட்டுவது, சபாநாயகரை முற்றுகையிடுவது என சட்டமன்ற மாண்புக்கே ஒவ்வாத வகையில் நடந்துகொண்டார்கள்.
இது எதிர்க்கட்சியின் ஜனநாயகப் போராட்டமா?
இல்லை. இது சட்டமன்றத்தை அலங்கோலப்படுத்தும் செயல்பாடு.

‘சபாநாயகர் யாருடையவர்?’
இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகரின் செயல்பாட்டை நாம் குறிப்பாகப் பாராட்ட வேண்டும். சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று தி.மு.க தரப்பில் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. ஆனால், சபாநாயகர் வெளியிட்ட நேரக் குறிப்பே அதற்குப் பதில் சொல்லிவிட்டது.
தி.மு.க உறுப்பினர்களுக்கு 33 மணி நேரமும், அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு 18 மணி நேரமும் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களுக்கோ, 16 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக சபாநாயகர் செயல்பட்டார் என்று சொல்லவே முடியாது.

முந்தைய ஆட்சியில் சபாநாயகரின் செயல்பாடு எப்படி இருந்தது? எதிர்க்கட்சியினர் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கும், கேள்விகளுக்கும் முதல்வரோ, அமைச்சர்களோ தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் சொல்ல வேண்டிய பதில்களை எல்லாம் பல நேரங்களில் சபாநாயகரே சொல்லிவிடுவார். ஆனால், தற்போதைய சபாநாயகர் அப்படி அல்ல. அவர், எல்லோருக்கும் பொதுவான சபாநாயகராகவே செயல்படுகிறார். அதுதான் உண்மையான சட்டமன்ற மாண்பு.

சட்டமன்றம்
சட்டமன்றம்

‘முதல்வர் அமைதியாக இருந்தது ஏன்?’
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அதிகமாகப் பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தார்கள். அவருடைய பாணியே அதுதான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதல்வர் விஜய் எப்போதுமே தன்னுடைய செயல்களின் மூலம் பதில் சொல்பவர். தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்க மாட்டார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அமைதியாகக் கேட்டுக்கொண்டு, குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில் முதலமைச்சர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். அதன்படி, அன்று அவர் பதில் அளித்தார்.
முதல்வர் அமைதியாக இருந்ததை, அவரது பலவீனம் என்று எதிர்க்கட்சியினர் கருதினார்கள். சீண்டினால் அவர் சிங்கம் போல எழுந்து நிற்பார் என்பதை அன்றைய தினம் தி.மு.க-வினர் பார்த்தார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. போதைப் பொருள் பிரச்னை மிகப்பெரிய சவால் என்பதை முதல்வரே சொல்லியிருக்கிறார். ‘கிளையை வெட்டியிருக்கிறோம்; மரத்தையே வெட்ட வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்கு பிரச்னையின் ஆழத்தை அவர் புரிந்துகொண்டிருக்கிறார்.
ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களுக்குப் பின்னால் போதைப் பொருள் கலாசாரம் முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த காலத்தில் இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான், தற்போதைய பிரச்னைகளுக்க முக்கியக் காரணம். இதையெல்லாம் முதல்வர் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

‘தி.மு.க வரலாறு எனக்குத் தெரியும்!’
எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தி.மு.க-வின் வரலாறு’ பற்றி முதலமைச்சர் பேசியதைத்தான் பெரிய சர்ச்சையாக தி.மு.க-வினர் மாற்றியிருக்கிறார்கள். ‘தி.மு.க-வின் பாரம்பரியம்’, ‘தி.மு.க-வின் வரலாறு’ என்று அவர்கள் பெருமையாகப் பேசுவார்கள். அந்த வரலாற்றுக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது என்பதைத்தான் முதல்வர் சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்னார்.
தி.மு.க-வின் வரலாறு எங்கே தொடங்குகிறது என்று கேட்டால், ஊழலில் இருந்துதான் தொடங்குகிறது என்று அவர் சொன்னார். சர்க்காரியா கமிஷன் முதல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வரை வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. அந்த உண்மைகளை வரலாற்றில் மறைக்க முடியாது. அதற்கான ஆவணங்களும், சான்றுகளும் நூலகங்களில் இருக்கின்றன.
மிசா காலத்தைப் பற்றி தி.மு.க தொடர்ந்து பேசிவருகிறது. யார் கைது செய்யப்பட்டார்கள்,.. என்ன கொடுமைகள் நிகழ்ந்தன.. என்பதையெல்லாம் அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். அதைப் பற்றி பேசக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இதன் இன்னொரு பக்கத்தையும் பேச வேண்டும். மிசா காலத்தின் முழு வரலாற்றையும் மக்களுக்கு விளக்கமாக, விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
 

ஒன்று, தி.மு.க ஆட்சியின் ஊழல்களை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு அமைத்த சர்க்காரியா கமிஷன். மற்றொன்று, மிசா. இந்த இரண்டு விவகாரங்களிலும் காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளைப் பற்றி தி.மு.க கடுமையாகப் பேசுகிறது. ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே காங்கிரஸுடன் மீண்டும் தி.மு-க அரசியல் உறவு வைத்துக்கொண்டது. அது எப்படி?
உங்களை அடித்தார்கள், உதைத்தார்கள், சிட்டிபாபு உயிரிழந்தார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே, அரசியல் தேவை வந்ததும், அதே காங்கிரஸுடன் ஏன் கூட்டணி அமைத்தீர்கள்? அதுதான் கேள்வி.
அந்தக் கால அரசியல் சமரசங்கள், சர்க்காரியா கமிஷன் தொடர்பான விவகாரங்கள், காவிரி பிரச்னையில் தி.மு.க அரசு செய்த சமரசம் எனப் பல விஷயங்கள் வரலாற்றில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு மிசா கொடுமைகள் என்று மட்டும் பேசுவது எப்படி நியாயம்? அது எப்படி முழுமையான வரலாறாகும்?

ஸ்டாலின்

‘கூட்டணி… கொள்கைக்காகவா, தற்காப்புக்காகவா?’
தி.மு.க மீது எப்போது ஊழல் குற்றச்சாட்டு வருகிறதோ, அப்போதெல்லாம் தனது கூட்டணிக் கட்சிக்கு அதிக தொகுதிகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மிசாவுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் அதைப் பார்த்தோம். 2ஜி காலகட்டத்திலும் அதைப் பார்த்தோம். காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் மிகப்பெரிய பலம் இல்லாத கட்சியாக இருந்தபோதிலும், அதற்கு அதிகமான தொகுதிகளை தி.மு.க ஏன் கொடுத்தது?
அப்படியென்றால், அது கொள்கைக் கூட்டணியா அல்லது அரசியல் தற்காப்புக்கான கூட்டணியா? இதுதான் தி.மு.க-வின் கடந்தகால அரசியலைப் பார்க்கும்போது நாங்கள் கேட்கும் கேள்வி.
இப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் பாருங்கள். பொதுவாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர் சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
ஆனால், இந்தக் கூட்டத்தொடரில் அவர் நடந்துகொண்ட விதம் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அவமரியாதையைத் தேடித்தருவதாக இருந்தது. முதலமைச்சர் பதில் சொல்லும்போதுகூட, அவரைப் பேசவிடாமல் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் இடையூறு செய்தார்கள். அது எப்படி ஜனநாயகமாகும்?
நீங்கள் கேள்வி கேட்டீர்கள். முதலமைச்சர் பதில் சொல்கிறார். அந்தப் பதிலைக் கேட்பதுதானே எதிர்க்கட்சித் தலைவரின் கடமை? மாறாக, பதில் சொல்ல விடாமல் தடுப்பது எந்த வகையான சட்டமன்ற ஜனநாயகம்?

‘அரசியல் விமர்சனம் வேறு… தனிப்பட்ட அவமதிப்பு வேறு!’
அரசியலில் எதிர்க்கட்சியை விமர்சிக்கலாம். கொள்கையை விமர்சிக்கலாம். ஆட்சியை விமர்சிக்கலாம். ஆனால், குடும்பத்தையும் பெண்களையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திப் பேசுவது அரசியல் நாகரிகம் கிடையாது.
தி.மு.க-வின் அரசியல் நாகரிகம் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். பெண்களைப் பற்றிப் பேசும்போது தி.மு.க-வினர் பயன்படுத்தும் வார்த்தைகள் பலமுறை எல்லை மீறியிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய சில கருத்துகளே இதற்கு உதாரணம். அதே போல, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினரைப் பற்றி பேசிய கருத்து எவ்வளவு மோசமானது என்பதை நாடறியும்.
பெண்களின் தாய்மையை அவமதிக்கும் வகையில் ஆ.ராசா பேசுகிறார் என்றால், அதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டாமா? அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஏனெனில், அவரும் அதுபோன்ற கருத்துக்களைப் பேசியவர்தான். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து ‘தவழ்ந்து போய் சசிகலாவின் காலில் விழுந்தவர்’ என்பது போன்ற தனிப்பட்ட தாக்குதலை மு.க.ஸ்டாலினே சட்டமன்றத்திலேயே நடத்தியிருக்கிறார்.
அதே பாணியில், உதயநிதி ஸ்டாலினின் சில பேச்சுகளும் இருந்திருக்கின்றன. தஞ்சையில் விவசாயிகள் மத்தியில் பேசிய உதயநிதி, எவ்வளவு ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தியும் பேசினார் என்பதை உலகமே பார்த்தது. ஆனால், இன்று வரை அந்தப் பேச்சு அவர் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறார். இதை எப்படி ஏற்க முடியும்?

உதயநிதி, ஸ்டாலின்

 ‘மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!’
இன்று தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், தி.மு.க-வினர் இன்னும் தங்களுடைய பழைய பாணியிலேயே அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், தங்களை எதிர்க்க யாராலும் முடியாது என்ற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த மனநிலையை ஏற்கெனவே தேர்தலில் தமிழக மக்கள் மாற்றிவிட்டார்கள். தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இளைஞர்கள் என்பதற்காக அவர்களைத் தாழ்வாகப் பார்க்க முடியாது என்பதை மக்கள் நிரூபித்துவிட்டார்கள்.
சட்டமன்றத்திலும் த.வெ.க உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிப் பிரச்னைகளைப் பேசுகிறார். பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள். அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். முதலமைச்சர் தேவையான நேரத்தில் முழுமையாகப் பதில் அளிக்கிறார். சபாநாயகர் நடுநிலையாகச் செயல்படுகிறார். இதுதான் நாங்கள் பார்க்கும் புதிய அரசியல். தி.மு.க இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், த.வெ.க-வுக்கு எதிராக தி.மு.க நடத்திய நடத்திய போராட்டத்தில் முதல்வர் பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் வாய்க்கு வந்தபடி தி.மு.க தலைவர்கள் பேசுகிறார்கள்.  அதற்கு த.வெ.க தகுதி பதிலை நிச்சயம் தரும். அவர்களின் குற்றச்சாட்டுக்கு நாங்கள் புள்ளிவிவரங்களுடன் பதில் சொல்வோம்.
அரசியல் நாகரிகத்தையும், ஆட்சியின் செயல்பாட்டையும், சட்டமன்றத்தின் மாண்பையும் காப்பாற்றுவது யார் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க தனது பழைய அரசியல் பாணியை மாற்றிக்கொள்ளாவிட்டால், வரக்கூடிய தேர்தல்களிலும் மக்கள் தங்களின் தீர்ப்பை இன்னும் கடுமையாக அளிப்பதற்கு தயங்க மாட்டார்கள் என்பது உறுதி!



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Получите [url=https://studencheskie-raboty.online/]помощь студентам онлайн[/url] для успешного выполнения учебных заданий. С ее помощью учащийся может лучше понять материал и исправить недочеты.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports