விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் முதலாவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் இப்தார் நோன்பு நிகழ்ச்சி குறித்து பேசினார். அப்பொழுது நோன்பு திறந்த பின்னர் அனைவரும் பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்க வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். அப்பொழுது அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி திடீரென எழுந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கையில் இருந்து மைக்கை பிடுங்கினார். அப்போது செஞ்சி மஸ்தான், அமைச்சர் பொன்முடியிடம் பேசுகையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது‌. இதனால் மேடையில் அமர்ந்திருந்த செஞ்சி மஸ்தான் முகம் வாடியது. இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார். சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி:

குல்லா அணிந்திருப்பதால் நாங்கள் இஸ்லாமியர் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நான் பகுத்தறிவாளன். இந்து மதத்தில் பல்வேறு சாதிகளை உருவாக்கி உயர்வு, தாழ்வுகளை உருவாக்கியுள்ளனர். எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் இருக்கக்கூடிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் அனைவரும் சமம் என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு. அனைவரும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக தான் இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நம்முடைய வேட்பாளர் ரவிக்குமார் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். குறிப்பாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய சின்னம் பானை. அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.