"நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களே முடிவெடுக்கும்" தமிழக மாணவர்களுக்கு ப்ராமிஸ் செய்த ராகுல் காந்தி!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கிறது.

"ஏழைகளுக்கு எதிராக உள்ள நீட்"

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்வதற்காக வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு குறித்து பேசிய அவர், "ஏழைகளுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், நீட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கே விட்டுவிடுகிறோம். மாநில அரசு வேண்டும் என்றால் வைத்து கொள்ளலாம். வேண்டாம் என்றால் விட்டு விடலாம். தமிழ்நாட்டின் கல்வி முறையை அவர்களே முடிவு செய்வார்கள்" என்றார்.

விவசாயிகள் குறித்து பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகளுக்கு அவர்களின் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும். நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளார் பிரதமர். ஆனால், நாங்கள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம்" என்றார்.

"இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புத கண்ணாடி"

இதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி, "சமூக நீதி பாதையில் எப்படி நடக்க வேண்டும் என்பதை இந்த நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரியபடுத்தினார்கள். இதனால்தான், இந்திய ஒற்றுமை பயணத்,தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.

எப்போது எல்லாம் இந்தியாவை புரந்து கொள்ள விரும்புகிறேனோ அப்போது எல்லாம் தமிழ்நாட்டை பார்க்கிறேன். இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புத கண்ணாடியாக தமிழ்நாடு உள்ளது" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட ராகுல் காந்தி, "தேசத்தின் எதிர்காலத்தை தமிழ்நாட்டு பெண்களும், இந்தியாவின் பெண்களும் தான் பார்த்துக் கொள்கிறார்கள். அருமையான பணிகளை செய்த பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான உரிமை வழங்கப்படவில்லை.

வறுமையின் பிடியின் கீழ் உள்ள பெண்களை தேர்வு செய்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்தியாவிலிருந்து வறுமையை நிரந்தரமாக அழிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்புகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதுடன் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களிலும் 50 % இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டின் பிரதமருக்கு தேசத்தின் மீனவர்கள் நலன்  மீது எந்த அக்கறையும் இல்லை. நாட்டின் விவசாயிகளைப் போல் மீனவர்களும் மிக முக்கியமானவர்கள். மீனவர்களுக்கென தனி தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

படகுகளுக்கான மானிய விலையில் டீசல், படகுகளுக்கான காப்பீடு திட்டம் மீனவர்களுக்கான கடன் அட்டை திட்டம் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தேர்தல் கலாச்சாரம், மொழி உள்ளிட்டவைகளை காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் யுத்தம். இந்த போரில் நாம்தான் வெற்றிப்பெறபோகிறோம்" என்றார்.

Source link