ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!


Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருள்களில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உணவு பொருள்களில் கலந்து விற்கப்படும் திரவ நைட்ரஜன்:
இதுகுறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.
மேலும் திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011 இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும்.
தமிழ்நாடு அரசு விடுத்த எச்சரிக்கை:
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006, பிரிவு 38(10)-ன்படி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006-ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த பொருளையும் உடனடியாக உறைய வைக்கும் திறன் கொண்டது திரவ நைட்ரஜன். தொழில் நிறுவனங்கள், மருத்துவ ஆய்வகங்களில் மட்டுமே திரவ நைட்ரஜன் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். திரவ நைட்ரஜனை உணவுப் பொருள் மீது பயன்படுத்தும் போது, அதை உண்பவர்களுக்கு மூச்சு குழாய் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
உணவு பொருள்களில் திரவ நைட்ரஜன் விற்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: 1000 கோடி சம்பாதிக்க அரசியல் கட்சி தொடங்கும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் – விஜய்யை விமர்சித்த இயக்குநர்!

மேலும் காண

Source link