Delhi Minister Resigns: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், டெல்லி அரசியல் அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

ஆம் ஆத்மி தலைவர்களை விடாது துரத்தும் வழக்கு:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது.

இறுதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 6 மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு, சஞ்சய் சிங்குக்கு சமீபத்தில் பிணை கிடைத்தது. ஆனால், மணீஷ் சிசோடியாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்னும் சிறையில்தான் உள்ளனர்.

தேர்தல் நெருங்கும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராஜ்குமார் ஆனந்த், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

டெல்லி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு:

இன்னும் பலர் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்டும் முயற்சி இறுது கட்டத்தை எட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

ராஜ்குமார் ஆனந்தை பொறுத்தவரையில், ஆம் ஆத்மி அரசாங்கத்தில் தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கட்சியில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்த ராஜ்குமார் ஆனந்த், "ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட செயலை பார்த்த பிறகு நான் அதில் சேர்ந்தேன். இன்று, கட்சியே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் விலக முடிவு செய்துள்ளேன்" என்றார்.

ஆம் ஆத்மி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய ராஜ்குமார் ஆனந்த், "ஆம் ஆத்மி கட்சியில் தலித் எம்எல்ஏவோ, கவுன்சிலரோ இல்லை. தலித் தலைவர்கள் தலைமைப் பதவிகளில் கூட நியமிக்கப்படுவதில்லை. நான் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுகிறேன். தலித் மக்களுக்காக என்னால் பணியாற்ற முடியவில்லை என்றால், கட்சியில் இருப்பதில் அர்த்தமில்லை" என்றார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பணமோசடி வழக்கில் ஆனந்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் (ED) சோதனை நடத்தினர். தற்போது டெல்லி முதலமைச்சர் சிறையில் உள்ள நிலையில், அமைச்சரவை எப்படி மாற்றி அமைக்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை.