நடிகர் சத்யேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தவர் இன்று இயற்கை எய்தினார். இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர்.
நடிகராக ‘ஏழாவது மனிதன்’, ‘மண்வாசனை’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’18 வயசு’ என்ற படத்தில் வில்லனாகவும் இவர் நடித்திருக்கிறார்.
இதனைத் தாண்டி இன்னும் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர் திரைப்பட விமர்சனம் செய்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலானது.
படங்களை இவர் விமர்சிக்கும் விதம், அதில் இவர் குறிப்பிடும் விஷயங்கள் என இணையவாசிகளிடையே இவர் கவனம் பெற்றார்.
அதன் பிறகு பல்வேறு உலக சினிமாக்கள் குறித்தும் நேர்காணல்களில் பேசத் தொடங்கினார். பிறகு இவர் பெயரிலேயே தனியாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கிப் படங்களை விமர்சனம் செய்து வந்தார். கடைசியாகக் ‘கருப்பு’ திரைப்படத்திற்கும் விமர்சனம் செய்திருந்தார்.

இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இவர் இறந்திருக்கிறார் எனக் காவல் துறையினர் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
பெங்களூருவிலுள்ள இவருடைய உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால் இவருடைய உடல் ராயப்பேட்டை மருத்துவமனையிலுள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருக்கிறது.






















