AIADMK Kumaraguru Profile: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுவதாக அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குமரகுரு இதற்கு முன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக 4 முறை இருந்துள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி கழக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
குமரகுரு தேர்தல் அனுபவம்
குமரகுரு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றதிற்கு 2006 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 மற்றும் 2016 இருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை தோல்வியுற செய்தார். பின்னர் 2021 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் 5,256 வாக்கு மற்றும் 2.17% வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
குமரகுரு வகித்த பதவிகள்
2016 முதல் 2021 வரை தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணைத் தலைவராகவும், 2019 முதல் 2021 வரை இரண்டு ஆண்டுகள் திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருக்கும்போது உளுந்தூர்பேட்டையில் திருப்பதியின் மறு உருவில் சின்ன திருப்பதி கோயில் உருவாக்க சொந்த நிலமும் வழங்கி கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார்.
சட்டமன்றம் to நாடாளுமன்றம்
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கள்ளகுறிச்சி தொகுதி வேட்பாளராக குமரகுருவை அறிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கிளை கழகச் செயலாளர், ஒன்றிய துணைச் செயலாளர், 15 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும், மேலும் கூட்டுறவு சங்கத் தலைவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) இன்று தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12,095 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.