ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உருவான வரலாறு:
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளில் 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்குப் பின்னர், ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்ற தொகுதியை தவிர, மற்ற ஐந்துமே புதிய சட்டமன்ற தொகுதிகள் தான் இடம்பெற்றுள்ளன. அதன்படி, மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம் மற்றும் தாம்பரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளனர். முன்பு தனித் தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர், தற்போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி எப்படி?
தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூரும் ஒன்று. பல்லவர்கள் ஆண்ட பகுதி என்ற சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ள இந்த தொகுதியில் தான், தமிழகத்தில் அதிக அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள தொகுதியாகவும் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழில் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆட்டோ மொபைல் தொழில்கள் இங்கு பிரதானம். உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொகுதியாக உள்ளது. பட்டியலின சமூகத்தினர் வன்னிய சமூக மக்கள் ஏறத்தாழ சரிபாதி எண்ணிக்கையில் இருக்கின்றனர். ரெட்டியார், யாதவ சமூக மக்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
திமுக வேட்பாளர் டி. ஆர் .பாலு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கிய தலைவர்களின் ஒருவராக இருக்கும் டி. ஆர் .பாலு ஸ்ரீபெரும்புதூர் மீண்டும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த அவர், அதே நம்பிக்கையில் இம்முறை போட்டியிடும் நிலையில் தற்பொழுது, அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர் Dr. G. பிரேம் குமார்
Dr. G. பிரேம் குமார். M..B.B.S…,M.D.R.D. காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவம் படித்து, பின்னர் அதே மருத்துவமனை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் குன்றத்தூரில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவராக தற்போது பணி செய்து வருகிறார். பூவை ஞானம் என என அனைவராலும் அழைக்கப்படும் , இவரது தந்தை திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்து வருகிறார், பூந்தமல்லி நகர தலைவராகவும் இருந்துள்ளார், எம்ஜிஆர் காலத்து மூத்த தொண்டர்களில் ஒருவர் , ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அஇஅதிமுகவில் அறியப்பட்ட பிரபலமான முகங்களில் ஒருவரின் மகன். சொந்தமாக திருமண மண்டபங்கள் என பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். ஆரம்பகால முதலே இவரது தந்தையுடன் இணைந்து தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவதும் தற்போது முதல் முறையாக தேர்தல் அரசியலில் நேரடியாக களம் கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
அதிமுகவின் நம்பிக்கை
படித்த வேட்பாளர் மற்றும் பல ஆண்டுகளாக அதிமுக கட்சியில் பயணிக்க கூடிய நபர் என்பதால் கட்சியினர் மத்தியில் நல்ல அறிமுகம். ஏற்கனவே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டி. ஆர்.பாலு மீது அதிருப்தி இருப்பதாக அதிமுகவினர் நம்புகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், சிறுபான்மை இன மக்கள் வாக்குகள் உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது அதிமுக.