Vijay: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்; நலம் விசாரித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்


நடிகர் அஜித் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் உடல் நலம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். துணிவு படத்துக்குப் பிறகு அவர் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், துபாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கவுள்ளது. இதற்காக படக்குழுவினர் இன்னும் சில தினங்களில் செல்லவுள்ள நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அஜித்குமார் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது சில ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் அவருக்கு எடுக்கப்பட்டது.
அதில் காதுக்கு கீழே உள்பகுதியில் சிறிய வீக்கம் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் பாதிப்பு இல்லை என்றாலும், சிகிச்சை எடுக்க விரும்பும் பட்சத்தில் அரைமணி நேரத்தில் சரி செய்து விடலாம் என்று மருத்துவர்களின் சொன்னதை  கேட்டு உடனடியாக சரி செய்ய சொல்லியதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் அஜித்துக்கு மூளையில் பிரச்சினை, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐசியுவில் இருப்பதாக எல்லாம் வதந்தி பரவ ஆரம்பித்தது. இதனால் ரசிகர்கள் சற்று பதறிப் போயினர்.
இப்படியான நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சமுத்திரகனி, இலியானா, மகிழ் திருமேனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, முன்னாள் அமைச்சர்கள்  விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளம் மூலம் அஜித் விரைந்து குணமாக வேண்டிக் கொண்டனர். அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியுன் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் அஜித் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவர் விரைவில் குணமடைய சமூக வலைத்தளங்களில் பலரும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் அவர் அடுத்த வாரம் நடைபெறவுள்ள விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link