Tiruvannamalai | திருவண்ணாமலை


பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. 
சிவபெருமானின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா 
ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார் சிவபெருமான்; இருவரும் ஒப்புக்கொண்டனர். மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண வராக உருவம் எடுத்து பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின் முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் அதனிடம் தான் சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம் அடியைக் காண சென்ற பெருமாள் காண முடியாமல் திரும்பி தன்னுடைய தோல்வியை சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார்.

வண்ண மலர்களால் லட்சார்ச்சனை 
பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய் தெரிவித்தார் அவருக்கு தாழம்பூ பொய்சாட்சி கூறியது. அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது எனவும் மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. அதேபோல் முடி காணாத ஜோதிப் பிழம்பாய் எழுந்தருளிய மகா சிவராத்திரி ஆகும். மேலும் நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த லிங்கோத்பவ மூர்த்தியாக சிவராத்திரி நாளன்று அண்ணாமலையார் எழுந்தருளினார். எனவே சிவராத்திரி எழுந்தருளிய திருத்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் சிவராத்திரி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவிலில் பல்வேறு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். கோவில் கொடிமரத்தின் அருகில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

4 கால பூஜைகள்
மகா சிவராத்திரியையொட்டி 4 கால பூஜைகள் நடைபெற்றது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது. மேலும் இன்று நள்ளிரவு 12 மணியளவில் அண்ணாமலையார் சன்னதி பின்புறம் மேற்குத் திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிரதம், ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற உள்ளது.  இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிவனுக்கு வைத்து வழிபடும் தாழம்பூவை வைத்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்ற உள்ளது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மேலும் காண

Source link