Sharad Pawar: புதிய கட்சி பெயர் மற்றும் சின்னம் இன்று அறிவிப்பு.. சரத் பவாரின் அடுத்த மூவ் என்ன?

தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவாரின் புதிய கட்சி பெயர் மற்றும் சின்னம் இன்று மதியம் 3 மணியளவில்  அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர்.

மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், சமீபத்தில்தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவாருக்கும் அவரின் அண்ணன் மகனுமான அஜித் பவாருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் தொடர் பிரச்சனை நிலவி வந்த நிலையில், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது. இந்த நிலையில், அஜித் பவாரின் கட்சியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சி மட்டுமல்லாமல் கட்சியின் சின்னமும் அஜித் பவார் பிரிவினருக்கே சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி கைமாறிய நிலையில் மூத்த தலைவர் சரத் பவார் இன்று தனது புது கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்படும் புது கட்சியின் பெயரில் தேசியவாதம் மற்றும் காங்கிரஸ் ஆகிய சொல் இருக்கும் என்றும் சக்கரம், டிராக்டர் ஆகியவை கொண்டு கட்சி சின்னம் இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

சரத் பவாரின் 60 ஆண்டுகால அரசியல் பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கும் முன்  4 வெவ்வேறு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். சரத் பவார் தரப்பில் கட்சியின் புதிய பெயர் மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்களில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாததால், சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் முன் ஒரு கோரிக்கை வைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 31 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link