Sathyaraj And Manivannan Starrer Amaithi Padai Movie Over 30 Years Anniversary | Amaithi Padai: ”அரசியலின் மறுபக்கத்தை கூறிய நாகராஜ சோழல் எம்.எல்.ஏ.”

Amaithi Padai: தமிழக அரசியல் அபத்தங்களை மிச்சம் வைக்காமல் நையாண்டி தனத்துடன் சத்யராஜ் மற்றும் மணிவண்ணனின் ரகளையில் வெளியான அமைதிப்படை இன்றுடன் 30வது ஆண்டை நிறைவு செய்கிறது. 
 
தமிழகத்தில் அரசியலும், சினிமாவும் ஒன்றுடன் ஒன்று கலந்தது என்றே கூறலாம். சினிமாவில் கலக்கிய எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா முதலமைச்சர்களாக ஆண்ட நிலையில் அவர்களின் வழியில் விஜயகாந்த், விஜய், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், நடிகைகளும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிளாக் அண்ட் வொயிட்  காலம் முதல் இந்த காலம் வரை அரசியல் பேசாத சினிமா இல்லை. அதில் அரசியல் நையாண்டிகளுக்கு எம்.ஆர். ராதா, கலைவாணர், சோ போன்றவர்கள் புகழ்பெற்றவர்கள். அவர்களின் வரிசையில் திரையில் அரசியலை நையாண்டி தனத்துடன் கூறுபவராக மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இருந்துள்ளார். அரசியலின் அபத்தங்களை கூறும் மணிவண்ணனின் ஸ்கிரிப்டிற்கு பக்காவாக பொருந்தி இருப்பார் சத்யராஜ். காமெடிக்கு சத்யராஜ் என்றால் சொல்லவே வேண்டாம். 
 
கேரக்டருக்கு ஏற்ப தன்னை மெருக்கேற்றி நடிக்கும் சத்யராஜ் அமைதிப்படை படத்தில் அமாவாசையாக நடித்து இருக்கும் சத்யராஜின் காட்சிகள் இன்றைக்கும் அரசியல் தலைகளின் இமேஜை டேமேஜ் செய்வதாக இருக்கும். 1994ம் ஆண்டு இதே நாளில் பொங்கல் ரிலீசாக அமைதிப்படை படம் வெளிவந்தது. படம் ரிலீசாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆரம்பத்தில் மணிவண்ணன் அமைதிப்படை கதையை சொன்னதும், ஹீரோவாக வளர்ந்து வந்த சத்யராஜ் நெகட்டிவ் ரோலில் நடிக்க வேண்டுமா என யோசித்துள்ளார். ஆனால், அமாவாசையின் அரசியல் விளையாட்டை கேட்டதும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சத்யராஜ். பின்னர் மணிவண்ணன், சத்யராஜ் காம்போ பக்காவாக பொருந்தி இன்று வரை கொண்டாட வைத்துள்ளது.
 
கோவிலில் உடைக்கப்படும் தேங்காயை பொறுக்கி சாப்பிடும் அமாவாசைக்கு குசும்புடன் கலந்த புத்திசாலிதனம் இருக்கும். அதனால் தான் மணிமாறனாக வந்த மணிவண்ணன் கிடைத்ததும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நாகராஜ சோழன் எம்.எல்.ஏ.வாக அமாவாசை உயருகிறார். எம்.எல்.ஏ. சீட் கிடைக்காததால் கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் மணிமாறன்( மணிவண்ணன்) கண்ணில் படுகிறான் அமாவாசை.   நாயிடம் சண்டை போட்டு தேங்காய் பொறுக்கும் அமாவாசையிடம் “ஏம்ப்பா… அரண்மனையைச் சுத்திப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா பரவாயில்ல. அரண்மனைக்கே ஆசைப்பட்டா எப்படிப்பா?” என்று மணிவண்ணன் கேட்க, “ஆசைப்பட்டதாலதாங்க மனுசன் நிலாவுல கால் வெச்சான்…” என்று ஆரம்பித்து சாதனையாளர்களின் பெயராக சத்யராஜ் அடுக்க, திரையில் மணிவண்ணன் மட்டும் இல்லாமல் பார்வையாளர்களும் வாய்ப்பிளப்பார்கள். 
 
தேங்காய் பொறுக்கும் ஒருவனிடம் இத்தனை அறிவா என்று கேட்க தோன்றும். அந்த புத்திசாலிதனத்தில் மயங்கும் மணிவண்ணன் சத்யராஜை நாகராஜ சோழன் எம்.எல்.ஏ. வாக உயர்த்துகிறார். பதவி வந்து எம்.எல்.ஏ. ஆக சத்யராஜ் உயர்ந்ததும் ஏத்துவிட்டவனை ஏறி மிதிப்பவனாக மாறுவார். மணிவண்ணனை அல்லக்கையாக மாற்றி வைத்திருக்கும் சத்யராஜ் செய்யும் அரசியல் தவறுகளும், அதை கிண்டலடித்து சொல்லி காட்டும் மணிவண்ணனும், தற்போது அரசியலில் நிலவும் ஊழல்கள், ரகளைகள், அட்டூழியங்களை திரையில் தோலுரித்து காட்டி இருப்பார்கள் இருவரும். ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை, கும்பகோண மகாமகம் முதல் ஆந்திரா சி.எம். அட்ராசிட்டி வரை அனைத்துமே நக்கலடித்து அப்லாஸ்களை அள்ளி இருக்கும் சத்யராஜ்- மணிவண்ணன் காம்போ.
 
அதேநேரம், அமாவாசையான சத்யராஜ், அல்வா கொடுத்து ஒரு பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்குவதும், அதனால் பிறக்கும் மற்றொரு சத்யராஜ், தந்தையையே பழிவாங்குவதுமே படத்தின் கதை. அரசியல் கலந்த நையாண்டி கதையாக இருந்தாலும், சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் வசனங்கள் கவனத்தை ஈர்த்தவை. அரசியலுக்குள் நடக்கும் ஊழலை அழகாக கூறியிருக்கும் அமைதிப்படையில் சத்யராஜ், மணிவண்ணன் மட்டுமில்லாமல், நடிகைகள் கஸ்தூரி, ரஞ்சிதா, சுஜாதா என ஒவ்வொருவரும் தங்களின் கேரக்டர் உணர்ந்து நடித்திருப்பார்கள்.
 
அரசியல் வசனங்களிலும், ரொமான்டிக் காட்சிகளிலும், ஏமாற்ற காட்சிகளிலும் பின்னணி இசையில் அசத்தி இருப்பார் இளையராஜா. இதனால் என்றென்றும் அரசியல் பேசும் அமைதிப்படைக்கு இன்றும் வரவேற்பு உள்ளது. 
 

Source link