மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்று ஒரு ஆணழகனாக தென்னிந்திய சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சரத்குமார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய திரையுலகிலும் பிரபலமானவர். ஒரு நடிகராக மட்டுமின்றி பாடி பில்டராக, அரசியல்வாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக பன்முக கலைஞராக அன்று போல் இன்றும் அதே சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வருகிறார்.

திரைப்பயணத்தின் தொடக்கம் :

’சமாஜம்லோ ஸ்திரீ’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் 1986ம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் சரத்குமார். தமிழில் ‘கண் சிமிட்டும் நேரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கு பிறகு அவர் நடிகர் விஜயகாந்தின் ‘புலன் விசாரணை’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மெல்ல மெல்ல ஹீரோ அந்தஸ்து பெற்று சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்பட்டார். இன்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் சரத்குமார் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

சரத்குமாரின் திருமணம் :

நடிகர் சரத்குமாருக்கும் சாயாதேவி என்பவருக்கும் 1984ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தனர். மிகவும் சந்தோஷமாக பயணித்த அவர்களின் திருமண வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு நடிகை ராதிகாவை 2001ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

நட்புறவு உண்டு :

சமீபத்தில் நேர்காணலில் பேசிய சரத்குமார் கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையோடு தான் இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன். வரலக்ஷ்மியின் அம்மாவும், நானும் பிரிந்த பிறகும் எங்கள் குடும்பத்துடன் அவர் நட்புறவோடு தான் இருக்கிறார். என்றுமே என்னுடைய மகள்களை என்னிடம் பேச கூடாது என கண்டித்தது இல்லை. நிகழ்ச்சிகளில் எங்களோடு சேர்ந்து கலந்து கொள்வதும் உண்டு. எங்கள் இருவரின் பாதைகளும் வெவ்வேறு திசையில் இருந்ததால் நாங்கள் அதில் தனித்தனியாக பயணித்து வருகிறோம். அது தவிர எங்கள் இருவருக்குள்ளும் எந்த ஒரு விரோதமும் கிடையாது.

ராதிகாவும் என்னுடைய குழந்தைகளை அவருடைய குழந்தைகள் போல தான் அன்புடன் பார்த்து கொள்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் வரலக்ஷ்மிக்கும் ராதிகாவுக்கும் புரிதலில் சில பிரச்சினைகள் இருந்தாலும், பின்னர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாகிவிட்டார்கள்.

வரலக்ஷ்மியின் கருத்து :

சரத்குமாரின் மூத்த மகள் வரலக்ஷ்மியும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார். ராதிகா என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி அதனால் அவர் எனக்கு அம்மாவாகி விட முடியாது. அவரை நான் ஆண்ட்டி என்று தான் அழைப்பேன். அதனால் அவரை பிடிக்கவில்லை என்ற அர்த்தமில்லை. நாங்கள் இருவரும் எங்களுக்கு இடையே இருக்கும் உறவை மேம்படுத்தி வருகிறோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது என வரலக்ஷ்மியின் முன்பு ஒரு நேர்காணலில் இப்படி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.