Sanatana row: சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதி தொடர்பான பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மார்ச் 6ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் பல திருத்தங்களை செய்துள்ளது.
சனாதனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் திருத்தம்:
சனாதனம் தொடர்பான அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோரின் பேச்சுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் கோ வாரண்டோ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீதான விசாரணையை தொடர்ந்து, கடந்த 6-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அனிதா சுமந்த் வழங்கிய தீர்ப்பின் நகல், மார்ச் 7 காலை உயர்நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், மார்ச் 8 அன்று, அந்த தீர்ப்பின் நகல் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக பல திருத்தங்களைக் கொண்ட புதிய நகல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பில் செய்யப்பட்ட திருத்தங்கள் என்ன?
முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட தீர்ப்பு நகலின் பத்தி எண் 43 இல், ”தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் 184 சாதிகளின் பட்டியல் இருப்பதாகவும், ஆனால் இந்த பிரிவுகள் சமீப காலமாகவே உருவானது என்றும், வேத இலக்கிய காலங்களில் இல்லை” என்றும் ரிட் மனுதாரர்கள் குறிப்பிட்டதை நீதிபதி பதிவு செய்திருந்தார். ஆனால், குறிப்பிட்ட பிரிவில் 184 சாதிகள் இருப்பதாக மனுதாரர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிட்டனர் என்பதற்கான எந்த குறிப்பும் மனுவில் இல்லை. இந்நிலையில், இரண்டாவதாக பதிவேற்றம் செய்யப்பட்ட தீர்ப்பு நகலில், தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு அந்த குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் இணையப் பிரதியின் 121வது பத்தியில், சென்னை குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த பேராசிரியர்களால், நீதிமன்றத்தின் வேண்டுகோளின்படி, மூல வேத நூல்களின் மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக நீதிபதி கூறியிருந்தார். சனாதன தர்மம் எப்போதும் உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நல்லொழுக்க வாழ்வின் சூழலில் பயன்படுத்தப்பட்டது. சமூகத்தின் நியாயமற்ற மற்றும் சமத்துவமற்ற பிளவுகளை எந்த வகையிலும் சனாதன தர்மம் பரப்புவதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என கூறியிருந்தார். ஆனால், திருத்தப்பட்ட இணைய நகலில், சனாதனம் எனும் சொற்றொடர் வர்ண அமைப்பின் சூழலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இணையப் பிரதியின் 128வது பத்தியில், சிந்து நதிக்கரையில் வசிப்பவர்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதோடு, ” சிந்து என்ற வார்த்தை வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் ‘இந்து’ என்று மாற்றப்பட்டது. இந்துக்கள் / சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்தை விரிவுபடுத்தியதால், அவர்கள் சனாதன தர்மத்தின் கொள்கைகளையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர்” என கூறியிருந்தார். திருத்தப்பட்ட இணைய நகல் அந்த வாக்கியங்களில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் அந்த கருத்துகளுக்கு முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய ‘தி இந்து வியூ ஆஃப் லைஃப்’ புத்தகம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று, சாதிகளின் அடிப்படை உள்ளிட்டவை தொடர்பான நீதிபதியின் கருத்துகளிலும், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நீதிபதி அனிதா சுமந்தின் கருத்துகள் ஒருதலைபட்சமாக, சனாதனத்திற்கு ஆதராவாக இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் தான், தீர்ப்பில் குறிப்பிடத்தக்க சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் காண