சேலம் மாவட்டம் இன்று 232 ஆண்டுகள் கடந்து 233 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்திலேயே சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு அடுத்து 5-வது பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது. சேலம் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்து பார்ப்போம்.
மாவட்டத்தின் வரலாறு:
மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம், 233 வருடங்களுக்கு முன்பு 1792 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது. ஆங்கிலேய படைகளுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையில் நடைபெற்ற போரின் முடிவாக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு முதல் மாவட்ட ஆட்சியராக அலெக்சாண்டர் ரீட் நியமிக்கப்பட்டார். 12 கோட்டைகள் என பொருள்படும் சேலம் பாரா மகால் மாவட்டம் என பெயரிடப்பட்டு, இன்றைய திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு சேலம் உருவானது. அதுவரை ராணுவம் மற்றும் வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்திய ஆங்கிலேயர், நிர்வாக ரீதியில் உருவாக்கிய முதல் மாவட்டமாக சேலம் திகழ்கிறது.
பெருமைகள்:
சேலம் மாவட்டத்தில் விளையும் ‘மல்கோவா மாம்பழம்’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1937 இல் இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலம் மாவட்டத்தில்தான். சேலம் ரயில்வே ஜங்ஷன் நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமான நடைமேடையாகும். சேலம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறி, ஜவ்வரிசி உற்பத்தி, வெள்ளி கொலுசுகள் ஆகும். இதுமட்டுமின்றி, மரவள்ளிக்கிழங்கு, பூக்கள், பழங்கள் என பல விவசாய தொழில்களும் உண்டு. ஏற்றுமதியை பொறுத்தவரை ஜவ்வரிசி, பட்டு ஆடைகள், பூ வகைகள், வெள்ளி கொலுசுகள், தேங்காய் நார் கயிறுகள் என பலவகையான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
சேலம் மாவட்டம் ‘லீ பஜார்’ கடைத் தெருவானது மிகவும் சிறப்பு வாய்ந்தது வணிக சந்தையாகும். இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று சந்தை நடைபெறும், அதில் மளிகை பொருட்கள் மொத்தமாக ஏலத்தில் விடப்பட்டு சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என பல மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்களில் மிகவும் பழமையான இடங்கள் உண்டு. குறிப்பாக, உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவில், கோட்டை மாரியம்மன் திருக்கோவில், கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில், தாரமங்கலம் சிவன் கோவில், திப்பு சுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், மாவட்டத்தில் மத்தியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பேராலயம், குழந்தைகள் ஏசு பேராலயம், அயோத்தியாபட்டணம் ராமர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், எருமாபாளையம் ராமானுஜர் மடம் சிறப்புவாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
காவிரி டெல்டா பாசனத்தின் வளம் குன்றாமல் பாதுகாக்கும் மேட்டூர் அணை, வேறங்கும் இல்லாத சிறப்பாக நகரப்பகுதியில் இருந்து 45 நிமிடத்தில் செல்லக்கூடிய தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காடு, பெயரைக் கேட்டவுடனே தித்திப்பை வழங்கும் சேலம் மாம்பழம், புவி அமைப்பியல் ஆய்வாளர்களின் சொர்க்கமாகத் திகழும் கனிமவளம் என எண்ணற்ற சிறப்புகளை கொண்ட சேலம் மாவட்டத்தில் இருந்து இன்றைக்கு ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர் என பல்வேறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய இடமாகவும் சேலம் திகழ்கிறது. இந்திய சினிமாவின் முன்னோடியாக திகழ்ந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இன்றைக்கும் சேலத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சேலம் மண்டலத்தில் கிடைத்த அனார்தசைட் பாறையின் துகள் வடிவம், நிலவின் மண் மாதிரியாக பயன்படுத்தப்பட்டதால் இன்றைக்கு நம்மால் நிலவில் கால் பதிக்க முடிந்தது. வளமான பெரும் நிலப்பரப்பாக 233 வருடங்களுக்கு முன் திகழ்ந்த சேலம் மாவட்டம் பழமை மாறாமல் இன்றைக்கும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் காண