Ranji Trophy Match Fees: ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது நாள் ஒன்றிற்கு 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை பிசிசிஐ ஊதியம் வழங்குகிறது.
ரஞ்சி வீரர்களுக்கு ஊதியம் உயர்வு?
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில், ரஞ்சி டிராபியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதற்கான திட்டத்தை இந்திய கிரிக்கெட் சம்மேளனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் முதன்மையான உள்நாட்டு ரெட்-பால் கிரிக்கெட் போட்டியாக ரஞ்சி கோப்பை கருதப்படுகிறது. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை விட அதிகம் பணம் புரளும், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க வீரர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் போக்கைக் கட்டுப்படுத்த பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுப்பதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ-யின் திட்டம் என்ன?
புதிய ஊதிய திட்டம் தொடர்பாக பேசிய பிசிசிஐ அதிகாரி, “டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டத்திற்குப் பிறகு, ரெட்-பால் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டை விளையாடும் வீரர்களுக்கு எப்படி வெகுமதி அளிக்கலாம் என்பதை பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. ரெட் பால் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போட்டிக் கட்டணத்தை அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஊதிய விவரங்கள்:
அண்மையில் வெளியான அறிவிப்பின்படி, டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டத்தின் கீழ், ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் ரூ. 15-லட்சம் போட்டிக் கட்டணத்துடன் சேர்த்து, அதிகபட்சமாக ரூ.45 லட்சம் ஊக்கத்தொகையாக பெற வழிவகை செய்யப்படுகிறது. ரஞ்சிக்காக போட்டிகளுக்கு தற்போது போட்டிக் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ 40,000 முதல் ரூ 60,000 வரை பிசிசிஐ வழங்குகிறது.
ஒரு வீரர் ஒரு சீசனில் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார் என்பதை பொறுத்து இந்த ஊதியம் மாறும். உதாரணமாக, ஒரு ஆண்டில் ஏழு குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலும் விளையாடினால், அவர் ஆண்டுக்கு சுமார் ரூ.11.2 லட்சத்தை ஊதியமாக பெறுவார். இது, வெறும் இரண்டு மாதங்களே நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான அடிப்படைத் தொகையான 20 லட்சத்தை விட குறைவாகும்.
ரஞ்சி போட்டியை தவிர்க்கும் வீரர்கள்:
ஐபிஎல் ஒப்பந்தங்களைக் கொண்ட பல வீரர்கள் அண்மைக்காலமாக ரஞ்சி டிராபி போட்டிகளை தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருவேளை காயம் ஏற்பட்டு, அதிக வருவாய் வழங்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் சூழலை தவிர்க்க ரஞ்சி போட்டிகளை இளம் வீரர்கள் தவிர்ப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஒப்பந்தமாகியுள்ள 165 இந்திய கிரிக்கெட் வீரர்களில், 56 பேர் ரஞ்சி சீசனில் மாநில அணிகளின் ரேடாரில் இருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 25 பேர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ளனர்.
மேலும் காண