Ramanathapuram news Banyans printed with pictures of Stalin, Udayanidhi seized rs 11 lakhs caught in one day – TNN | ஸ்டாலின், உதயநிதி படங்கள் அச்சிட்ட பனியன்கள் பறிமுதல்


 
மக்களவை தேர்தலையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களவை தொகுதிக்கான ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
 
மேலும், ஒவ்வொரு வாகனத்திலும் கையடக்க ‘டேப்ளட்’ நவீன போன் மூலமாக வீடியோக்கள் முழுவதுமாக பதிந்து சேமிக்கப்படுகிறது. ரூ.49 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் அகற்றுதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்துகின்றனர்.
 
அதிகாரிகள் தரப்பில், “வாகனத் தணிக்கையின் போது, வீடியோ பதிவுக்குழு இருந்தாலும், வாகனங்களில் சிசிடிவிக்கள் பொருத்தி இருப்பதன் மூலம் எல்லா கோணத்திலும் கண்காணிக்க முடியும். இம்முறை இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என கூறப்படுகிறது.

 
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் மட்டும், பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.10,88,730 பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கருவூலங்களில் செலுத்தப்பட்டுள்ளது.
 
மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை-பரமக்குடியில் கருமொழி செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அலுவலர் வீரராஜா தலைமையில் நடந்து வந்த இந்த சோதனையில் தேவகோட்டையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரினை சோதனை செய்துள்ளனர். அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படம் அச்சடிக்கப்பட்ட 47 பனியன்களும், தகுந்த ஆவணங்கள் இன்றி ரூ.80 ஆயிரம் ரொக்கமும் இருந்துள்ளது. அந்த புகைப்படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களில் ராமநாதபுரம் மாவட்டம், திமுக இளைஞர் அணி என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது.
 
எனவே, இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப இளைஞரணி செயலாளர் கண்ணன், ராமநாதபுரம் பவுசுல்லா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படை அலுவலர் கோட்டைராஜா தலைமையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.97 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாம்பனை சேர்ந்த கோமதி என்பவரிடம் அதிகாரிகள் தங்களது விசாரணையினை நடத்தி வருகிறார்கள்.

 
இதே போல், பரமக்குடி அருகில் தெளிச்சாத்தநல்லூர் என்னும் பகுதியில் தாசில்தார் வரதன் மற்றும் பறக்கும் படை அலுவலர் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் விளத்தூர் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் இருந்து தகுந்த ஆவணமின்றி ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணத்தினை கொண்டு சென்ற விளத்தூர் பார்த்திபனை பரமக்குடி தலைமையிடத்து தாசில்தாரான சீதாலட்சுமியிடம் அலுவலர்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்துள்ள பணத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பணம் திரும்ப கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link