புதுச்சேரி: `இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்!' - காவல்துறை தலைமை அதிரடி உத்தரவு


புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளாக இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு நிகராக உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, அப்படி அணியாமல் சென்றவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டது. அதற்கு, புதுச்சேரி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த அறிவிப்பு அப்படியே கைவிடப்பட்டது.

அதையடுத்து, புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் அப்போதைய போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார். அதில், `முறையற்ற வகையில் மோட்டார் வாகனங்களை இயக்குவதால் அன்றாடம் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வதால் விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது 80% தடுக்கப்படுகிறது.

புதுச்சேரி போலீஸ்

கடந்த 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரையில் மட்டும் தலைக்கவசம் அணியாததன் காரணமாக 181 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் ரூ.1,000/- அபராதத்துடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து 2022 நவம்பர் 1-ம் தேதி முதல் அந்த அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தினர் போக்குவரத்து போலீஸார். ஆனால் அந்த அறிவிப்பை எதிர்த்து மீண்டும் பல்வேறு தரப்பினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.

அதனால் அந்த அறிவிப்பும் அப்படியே திரும்பப் பெறப்பட்டது. அதையடுத்து கடந்த 2025 ஜனவரி 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார் அப்போதைய போக்குவரத்துத் துறை சீனியர் எஸ்.பி பிரவீன்குமார் திரிபாதி. மேலும், “புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு ரூ.1,000/- அபராதம் விதிக்கப்படும். அவர்களின் லைசென்ஸ் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் இது பொருந்தும். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது” என்று கூறியிருந்தார். அதன்பிறகு அது சில நாட்கள் கடைப்பிடிக்கவும் பட்டது.

ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துப் போலீஸார் பாராட்டி பரிசுகளும் கொடுத்தனர். ஆனால் ஹெல்மெட் கட்டாயச் சட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், அதுவும் கைவிடப்பட்டது. ஆனால், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஹெல்மெட் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை எவ்வித சமரசமுமின்றித் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

அதனால் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவதை படிப்படியாக நடைமுறைப்படுத்த முடிவெடுத்திருக்கிறது காவல்துறை தலைமை. அதன் ஒர் பகுதியாக போலீஸார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை தலைமையக எஸ்.பி மோகன்குமார் வெளியிட்டிருக்கும் அந்த சுற்றறிக்கையில், `புதுச்சேரி போலீஸார் சீருடையில் இருந்தாலும், சாதாரண உடையில் இருந்தாலும், அரசு வாகனமாக இருந்தாலும் அல்லது சொந்த வாகனமாக இருந்தாலும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

அதை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டங்களின்படியும், துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளின்படியும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மேற்பார்வை அதிகாரிகளும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவலர்கள் இந்த விதியைத் தீவிரமாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சட்டத்தை கற்பிக்கும் போலீஸார், இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி காவல் தலைமையகம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed