கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம்!! ஈரான் மீது புதிய போரை அறிவித்த டிரம்ப்..!!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வருவதை போல அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒரு அதிரடியாக முடிவினை அறிவித்துள்ளார். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புதிய போரை ஈரான் மீது தொடர இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஈரான் நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை அவர் Economic D-Day என சுட்டிக்காட்டுகிறார். அதாவது ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தாமல் பொருளாதார ரீதியாக ஈரானை ஒடுக்கும் வகையில் பொருளாதார போரை தொடுப்பதாக அறிவித்துள்ளார்.
ஈரான் மீது விதிக்கப்படவுள்ள இந்த பொருளாதார தடைகள் மிகவும் தீவிரமானதாக இருக்கும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யும் அல்லது ஆதரவு அளிக்கும் பிற நாடுகளும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
தன்னுடைய சமூக வலைதள பதிவில், ஈரானுக்கு உதவும் நாடுகள் மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம், ஈரானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் நோக்கில் அவர் செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஈரானுக்கு கொடுத்த பல வாய்ப்புகளை அந்த நாடு தவறவிட்டுவிட்டது என கூறியுள்ள டிரம்ப் இதுவரை எந்த நாடும் சந்திக்காத ஒரு பொருளாதார நெருக்கடியை ஈரான் சந்திக்கும் என கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. 5 மாதங்களாக இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்கின்றன. இரு தரப்புமே சமாதானம் என்ற பேச்சுக்கு இடமில்லை என கூறி வருகின்றன.
இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் மிக மோசமான நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது ஓரளவுக்கு நிலைமை சீராகியுள்ளது. இருந்தாலும் 100% பழைய நிலைமை இன்னமும் வரவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி தங்களுடையது என ஈரானும் அமெரிக்காவும் சொந்தம் கொண்டாடி வருவதால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வே கிடைக்காமல் உள்ளது.
முன்னதாக டொனால்ட் டிரம்ப் தனது முந்தைய பதவிக்காலத்தில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதுடன், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமல்படுத்தினார். தற்போது அவர் மீண்டும் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, சர்வதேச அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதன் மூலம் அந்நாட்டின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பதே டிரம்ப்பின் இந்த அதிரடித் திட்டத்தின் மையமாக உள்ளது. ஏற்கனவே ரஷ்யா மீதும் இப்படி ஒரு அணுகுமுறையை தான் டிரம்ப் கையாண்டார். இதனால் ரஷ்யா கடும் பொருளாதார தடைகளை எதிர்கொண்டது. அதே முறையை ஈரானுக்கும் பின் தொடர முடிவு செய்துள்ளது. இதற்கு ஈரானின் எதிர்வினையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.









![தொகுதி மறுவரையறை: “ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த ‘எட்டப்பர்’ விஜயா?” – திமுக எம்.பி தயாநிதிமாறன்|Delimitation: “Is Vijaya that ‘Ettappar’ [traitor] Rahul Gandhi referred to?” – DMK MP Dayanidhi Maran | ACTPnews.com](https://actpnews.com/wp-content/uploads/2026/08/1787298062-300x158.avif)














