Project Hailmary Review

விண்வெளியில் நட்பிற்காக இருவர் செய்யும் தியாகங்களே இந்த ‘ப்ராஜெக்டஹெய்ல் மேரி’.

பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கிறார் கிரேஸ் (ரையன் காஸ்லிங்). ‘ஆஸ்ட்ரோபேஜ்’ எனப்படுகிற நுண்ணுயிரானது சூரியனை அழித்துக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் 30 ஆண்டுகளில் பூமி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி மனிதர்களுக்கு ஆபத்தாகிவிடும்.

இதனை அறியும் அரசாங்கம் அதனைத் தடுத்து முடிவு கட்ட நினைக்கிறது. ‘ஆஸ்ட்ரோபேஜ்’ நுண்ணுயிரைக் கட்டுப்படுத்தும் ‘ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி’க்காக விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார் கிரேஸ்.

Project Hailmary Review

விண்வெளிக்குச் செல்வதனால் ஏற்படும் ஆபத்துகளை முன்பே அறியும் கிரேஸ் விண்வெளி பயணத்திற்குத் தயங்குகிறார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக கோமா நிலைக்குக் கொண்டு சென்று விண்வெளிக்கும் அனுப்பிவிடுகிறார்கள்.

அதைத்தொடர்ந்து, ‘ஆஸ்ட்ரோபேஜ்’ நுண்ணுயிரை கிரேஸ் எப்படிக் கட்டுப்படுத்தினார், அங்கு அவருக்கு மலரும் நட்பு, மீண்டும் கிரேஸ் பூமிக்குத் திரும்பினாரா போன்றவற்றை விரிகிறது இந்தச் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம்.

பள்ளியாசிரியராகக் கலகலப்பு, விருப்பத்தை மீறி தரப்படும் நெருக்கடியினால் துன்பத்தைச் சந்திக்கும் இடம், அனைத்தையும் மறந்துப் போன பிறகு விண்வெளியில் அத்தனையையும் கையாளும் விதம், நண்பனுக்கான தியாகம் என ஒற்றை கதாபாத்திரமாக படத்திற்கு ‘ஃபுல் டாங் ஃபுயூல்’ போட்டிருக்கிறார்.

விண்வெளியில் கிரேஸுக்கு நண்பனாகும் ராக்கி எனும் ஏலியன், கதைக்கு உணர்ச்சிப்பூர்வமான நிறம் சேர்க்கிறது. இருவரும் தகவல்கள் பரிமாறிக் கொள்ள பொதுவான மொழியில்லாதபோது, தொழில்நுட்பம் உதவி கொண்டு இவர்கள் நிகழ்த்தும் உரையாடல்கள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. அவை பல இடங்களில் ரசிக்க வைக்கும் ‘க்யூட்’ விஷயங்களாகப் புன்முறுவல் வர வைத்திருக்கின்றன.

இந்த மிஷனின் தலைவராக வரும் சாண்ட்ரா ஹல்லர் அரசாங்கம் தரும் அழுத்தத்தினால் மனிதாபிமானமற்ற விஷயங்களைச் செய்பவராக நடிப்பில் நல்லதொரு பங்களிப்பை நல்கியிருக்கிறார்.

Project Hailmary Review
Project Hailmary Review

விண்வெளி, விண்கலம், அதற்குள்ளிருக்கும் குறுகிய அறைகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் என்பன போன்ற விஷயங்களைத் தனது சட்டகத்திற்குள் அடக்கிப் பிரமாண்ட விஷுவல்களைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரைக் ஃப்ராசர் (Greig Fraser). நேர்த்தியான கிராபிக்ஸும், கலை இயக்கமும் ஒளிப்பதிவாளரின் ப்ரேமுக்குத் தீனி போட்டிருக்கின்றன.

விண்வெளியில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் காட்சிகளிலிருந்து இடையிடையே ப்ளாஷ்பேக்கிற்குக் கொண்டு சென்று முதல் பாதியின் வேக மீட்டரில் படத்தொகுப்பாளர்கள் கவனமாய் இருந்திருக்கிறார்கள். அதே சமயம் ஒரே இடத்தில் சுற்றும் இரண்டாம் பாதியைப் புவியீர்ப்பு விசையில்லாதது போல மெதுவாக மிதந்துப் போக வைக்கவும் செய்திருக்கிறார்கள்.

ஆர்பாட்டமில்லாத இசையைத் தந்து உணர்ச்சிமிகுந்த காட்சிகளுக்கு அடர்த்தியைச் சேர்த்திருக்கிறது இசையமைப்பாளர் டேனியன் பெம்பர்டானின் பின்னணி இசை. ஒரு சில இடங்களில் காட்சிகளுக்கு சைலன்ஸ் சேர்த்த விதம், நம்மை சீட் நுனியில் அமர வைக்கும் விறுவிறுப்புக்கும் உதவியிருக்கிறது.

அமெரிக்க எழுத்தாளர் ஆண்டி வியர் எழுதிய ‘ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி’ நாவலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இயக்குநர்கள் பில் லார்ட் & கிறிஸ்டோபர் மில்லர்.

சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களின் வழக்கமான வழித்தடத்திலிருந்து மாற்று ரூட்டைப் பிடித்து ஏவுகணையைப் பறக்கவிட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். ‘ஆஸ்ட்ரோபேஜ்’ எனப்படும் நுண்ணுயிர், அது உண்டாக்கும் ஆபத்து, அதைத் தடுக்கப் போகும் கிரேஸ் என்கிற சயின்ஸ் ஃபிக்ஷன் லைனிலும் திடமாக நின்று களமாடுகிறது திரைக்கதை.

அதே சமயம், அங்கு கிரேஸுக்கு மலரும் ஏலியனுடனான நட்பு, அவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்கள், பரஸ்பரம் நட்பிற்காகச் செய்துக் கொள்ளும் தியாகங்கள் என்பன போன்ற விஷயங்கள் திரைக்கதைக்கு ‘மெய்யழகன்’ வைப் சேர்க்கிறது.

Project Hailmary Review
Project Hailmary Review

எல்லாம் மறந்துப் போய் ஒன்றும் அறியாதவராக இருக்கும் கிரேஸ் விண்கலத்தைச் சுற்றி வரும் தருணங்கள், ஏலியனுடன் தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் விதம் போன்ற விஷயங்கள் முதல் பாதியைச் சுவாரஸ்யமானதாக மாற்றியிருக்கின்றன.

ஆனால் அதன் பின் வரும் இரண்டாம் பாதி ஒரே இடத்தை மீண்டும் மீண்டும் சுற்றி 360 டிகிரி ரவுண்டு வருவதால் சற்றே சோர்வையும் உண்டாக்குகிறது. இப்படியான விண்வெளி தொடர்பான மிஷன்களுக்கு அரசு சார்பிலிருந்து எப்படியான அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்பதையும் பதிவு செய்கிறது இந்தப் படைப்பு.

சயின்ஸ் ஃபிக்ஷன் ப்ளேவரில் உணர்ச்சிமிகுந்த பீல் குட் டிராமாவையும் சேர்த்து சொல்லும் இந்தப் ப்ராஜெக்ட் சக்சஸ்தான்!

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed