மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்னாது அது ஏஐ வீடியோவா?

அதிலும், சமீப காலமாக டீப் பேக் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் இந்த பிரச்சினை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இதனை டீப் பேக் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.

தனக்கு புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் வீடியோ மூலம் தெரிவித்தார். இந்த வீடியோவில் நீல சட்டை அணிந்து, பார்க்கில் அமர்ந்தபடி இளவரசி கேத் மிடில்டன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பலரும் டீப் பேக் வீடியோ என்று கூறுகின்றனர்.

இந்த வீடியோவில் எந்த ஒரு அசைவும் இல்லை எனவும், இளவரசி கேத் மிடில்டனும் தலை, கை அசைவு எதுவுமின்றி பேசியுள்ளதாகவும் நெட்டிசன்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். எனவே, இது டீப் பேக் வீடியோவாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.

என்னாச்சு இங்கிலாந்து இளவரசிக்கு?

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன்.

எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு குறித்த தகவலை வெளியிடாமல் இருந்தோம். புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்த போது எனக்கும் வில்லியம்ஸூக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜனவரி மாதம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நலம் மீண்டு வர நீண்ட காலம் ஆனது.

அதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற முடியவில்லை. தற்போது சிகிச்சை தொடங்கியுள்ள நிலையில் எங்கள் குழந்தைகளிடம் இப்பிரச்சினையை புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் தற்போது நலமாக இருக்கிறேன். நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் உடலளவிலும், மனதளவிலும் வலுப்பெற்று வருகிறேன்” என கேத் மிடில்டன் கூறியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது டீப் பேக் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கூறிவருகின்றனர்.