popular carnatic singers ranjani and gayathri has announced withdrawn from 98th music academy conference as it is persuaded by t m krishna | Ranjani – Gayathri Issue: பெரியாரை போற்றிய டி.எம்.கிருஷ்ணா.. சங்கீத அகாடமி மாநாட்டை புறக்கணிக்கும் ரஞ்சனி


கர்நாடக இசை உலகில் தற்போது புதிய பிரச்சனை தலை தூக்கியுள்ளது. பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணாவிற்கு எதிராக கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அதே சமயம் அவர் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, கர்நாடக இசை உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்தாண்டு நடைபெறும் 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டை டி.எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார். டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி – காயத்ரி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மியூசிக் அகாடமியின் மாநாடு 2024ல் பங்கேற்பதில் இருந்தும், டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுகிறோம். 
இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.
பல ஆண்டுகளாக கர்நாடக இசையை தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசை கலைஞர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவரது செயல்கள் உள்ளன. ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது. பெரியார் பிராமணர்கள் கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தை திணிக்க நினைத்தவர் பெரியார்.
கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், நமது கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பு சமூகத்தை நாங்கள் நம்புகிறோம். இவற்றை புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டால் அது நாம் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்” என தெரிவித்துள்ளனர்.
ரஞ்சனி, காயத்ரியின் இந்த முடிவைக் குறித்து, ”அப்பட்டமான சாதி உணர்ச்சியையும், வெறுப்பையும் இந்த சகோதரிகள் வெளிப்படுத்துகிறார்கள்” ஒரு தரப்பும், ”இது நல்ல முடிவு” என ஒருதரப்புமாக, கண்டனங்களும், ஆதரவும் இவர்களுக்குக் குவிகின்றன.

மேலும் காண

Source link