திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.
சிக்கி தவிக்கும் பொன்முடி:
கடந்தாண்டு டிசம்பர் மாதம், சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக தலைவர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காரணத்தால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடியை குற்றவாளியாக அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க திமுக முடிவு எடுத்தது.
தமிழ்நாடு ஆளுநரின் முடிவுக்கு காரணம் என்ன?
எனவே, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார். ஆனால், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என தீர்ப்பு அளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் இப்படி தீர்ப்பு வழங்கி இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியானபோது, பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என முதலில் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, திருத்தம் செய்யப்பட்ட புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை எனவும் பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதையும் படிக்க: Electoral Bonds: திமுகவுக்கு கோடிக்கணக்கில் வாரி வழங்கிய லாட்டரி கிங்.. பகீர் கிளப்பும் தேர்தல் பத்திரம்!
மேலும் காண