Pa. Ranjith speech casteism in movies at PK rosy film festival | Pa. Ranjith : தேவர் மகன், சின்ன கவுண்டர் படத்தை இயல்பா எடுத்துகிட்டாங்க.. ஆனா


தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு இயக்குநராக மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு இயக்குநராக கொண்டாடப்படுபவர் இயக்குநர் பா. ரஞ்சித். தலித் மக்களின் வாழ்வியலையும், ஒடுக்கப்படும் இயல்பான மனிதர்களின் உரிமை குரலாகவும் படங்களில் காட்சிப்படுத்துவது அவரின் தனி சிறப்பு. ஏராளமானோரின் கவனம் ஈர்த்த இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் அவரின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தி வரும்  பிகே ரோஸி திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார்.
 

தமிழ் சினிமாவில் ஜாதியே கிடையாது. பா. ரஞ்சித் வந்து தான் ஜாதிக்கு என ஒரு தனி சினிமாவை உருவாக்கி வருகிறார் அப்படின்னு ஒரு கதை பரப்பப்படுகிறது. ஹாலிவுட்டில் எப்படி ஸ்பைக் லீயை ரேசிஸ்ட் என சொல்கிறார்களோ அதே போல நம்மை காஸ்டிஸ்ட் என சொல்கிறார்கள். 
10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சினிமாவுக்கு வந்தபோது நான் நிறைய பிரச்னைகளை சந்தித்தேன். என்னுடைய இழிவுகளை சொல்லி ஒரு இரக்கத்தையும் ஆதரவையும் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை.  எனக்கு ஒரு தேடல், தேவை இருந்தது. இவ்வளவு பெரிய சினிமாவில் தலித் மக்களின் கதைகள், கதாபாத்திரங்கள் என்னவாக இருக்கிறது? எதற்காக அவர்களை பற்றி இப்படி ஒரு கதையாடல் சொல்லப்படுகிறது? அவை அனைத்தும் உண்மையா? அல்லது அந்த கதையாடல் மூலம் உண்மையான கதையை நோக்கி நாம் நகர வேண்டிய தேவை ஏற்பட்டதா? என்பதை பற்றி நான் படித்த புத்தகங்கள், இலக்கியங்கள் மற்றும் நான் பார்த்த சினிமா மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன். 
தலித் மக்கள் இழிவாகவே பார்க்கப்படுவது என்பது ஒரு பிம்பமாகவே இருக்கிறது என்பதை நான் படித்ததில் இருந்து தெரிந்து கொண்டேன். உண்மையிலேயே தலித் மக்களின் தேவை என்ன? அவர்களின் கலாச்சாரம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற யோசனை ஏற்பட்டது. அதற்கு பின்னால் நிறைய போராட்டங்கள், கலை வடிவங்கள், கொண்டாட்டங்கள், கதாபாத்திரங்கள் இருந்தது. இப்படியான நிறைய கேள்விகளுடன்தான் என்னுடைய சினிமா வாழ்க்கை துவங்கியது. 

தமிழ் சினிமாவில் இப்போது தான் சாதிகள் பற்றி பேசப்படுகிறது, ஆரோக்கியமான சினிமாவில் ஏன் இப்படி தலித் சாதி மனநிலைகளை கொண்டு வரவேண்டும்? இப்படிப்பட்ட படங்களை எடுப்பதால் தான் சாதிகள் பற்றின பேச்சுக்கள் வருகின்றன. உங்களை போன்றவர்கள் வந்துதான் இப்படி படங்களை எடுக்கிறீர்கள் என்ற ஒரு கதை பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
உண்மையிலேயே 90களில் தேவர் மகன், சின்ன கவுண்டர், கவுண்டர் வீட்டு பொண்ணு, கவுண்டர் மாப்பிள்ளை என ஜாதிகளை வைத்து எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பொது சமூகங்களால் மிகவும் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாதியை சொல்லி பேசுவது இந்த சமூகத்தில் பிரச்னையாக இல்லை.
சாதி பெயர்களை கொண்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நிறையவே வந்துள்ளன. ஆனால் அப்போது எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. சாதியின் பெருமைகளை பேச கூடிய, அடைமொழியாய் வைத்து பெரிய அளவில் படங்கள் வந்த போதும் பெரிய விவாதமோ அல்லது பொது தளங்களில் விமர்சனங்களையோ முன்வைக்கவில்லை.   
ஆனால் இப்போதுதான் அதற்கு எதிரான சினிமாவாக பார்க்கப்படுகிறது. எது மிகவும் இயல்பான சினிமா? அன்றைய காலகட்டங்களில் வந்த படங்களுக்கும் இன்று வரும் படங்களுக்கும் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது. இது போன்ற படங்களில் தலித் மக்களின் கதாபாத்திரங்கள் என்னவாக இருக்கிறது? சமூகம் மீது அவர்கள் முன்வைக்கும் கருத்து என்ன? அதற்கு தீர்வு என்ன? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. அதனால்தான் முரண்பாடுகளும் விமர்சனங்களும் ஏற்படுகின்றன என்றார்

மேலும் காண

Source link