நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதே நேரத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் அகற்ற I.N.D.I.A கூட்டணி கடும் முயற்சி செய்து வருகிறது. I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டது.
ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, பீகார் மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ் காட்டும் I.N.D.I.A கூட்டணி:
அதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் இடதுசாரி கட்சிகளுக்கு 5 தொகுதிகளும் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகளை பொறுத்தவரையில், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 3 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும் இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது.
ஆனால், ஒரு தொகுதியில் உடன்பாடு எட்டப்படாததால் அங்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகித்து வந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் இணைந்ததால் தொகுதி உடன்பாடு சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், தொகுதிகளை பிரித்து கொள்வதில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக, கட்சி தலைமையின் அறிவுறுத்தலை அடுத்து தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4 கட்டங்களாகவும் அஸ்ஸாம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் 2 கட்டங்களாகவும், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் காண