Mukhtar Ansari Dies: முக்தார் அன்சாரி கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்தார் அன்சாரி உயிரிழப்பு:
கேங்ஸ்டர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி, நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். சிறையில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் பண்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்தார் அன்சாரி யார்?
60 வயதான அன்சாரி, மௌ சதார் தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகித்துள்ளார். 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்ட அவர் 2022 செப்டம்பர் முதல் 8 வழக்குகளில் உத்தரபிரதேச நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்த இருப்பினும் கடந்த 2005ம் ஆண்டு முதல் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் சிறையில் இருந்தார்.
அன்சாரி மீதான வழக்குகள்
கடந்த ஆண்டு உத்தரபிரதேச காவல்துறை வெளியிட்ட 66 பிரபல கேங்ஸ்டர்களின் பட்டியலில் அன்சாரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் அவர் பூர்வாஞ்சலில் மட்டுமின்றி, உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பயங்கரவாத செய்லபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதக் கலவரங்கள், குற்றச் சதி, மிரட்டல், சொத்து மோசடி, பொது விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் வேண்டுமென்றே தீங்கு விளைவிக்கும் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. 1988 ஆம் ஆண்டு நிலத்தகராறு காரணமாக சச்சிதானந்த ராய் கொலை வழக்கில் காஜிபூர் மாவட்டத்தில் அவரது பெயர் முதன்முறையகா பேசுபொருளானது.
அரசியல் பயணம்:
அன்சாரி காசி இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் இறங்கினார், பின்னர் 1996ம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் மவு தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பிறகு, தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ., பதவியை தக்கவைத்துக் கொண்டார். 1996ம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சி, 2002 மற்றும் 2007ல் சுயேச்சையாகவும், 2012ல் தனது சொந்தக் கட்சியான குவாமி ஏக்தா தளத்தின் வாயிலாகவும், 2017ல் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் தனது கட்சியை இணைத்தும் தனது எம்.எல்.ஏ., பதவியை தக்கவைத்துக் கொண்டார்.
முக்தார் அன்சாரி சொத்துக்கள்
கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, அன்சாரி தன்னைச் சார்ந்தவர்களின் பெயரில் 21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்தார்.. கூடுதலாக, அவர் மீது 16 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்தார். இருப்பினும், முக்தார் அன்சாரியை கைது செய்த பிறகு ரூ.586 கோடி மதிப்பிலான சொத்துகளை போலீசார் பறிமுதல் செய்து, ரூ.2100 கோடிக்கு மதிப்பிலான சட்டவிரோத வணிகங்களை மூடியுள்ளனர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகத்தின் கீழ், மாநிலத்தின் முக்கிய கேங்ஸ்டர் ஆக இருந்த முக்தார் அன்சாரியின் செல்வாக்கு கடுமையாக சரிந்தது.
மேலும் காண