மக்களவைத் தேர்தல் 2024

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிடக்கூடாது என மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் எந்த வழியிலும் கொண்டு செல்லப்படக்கூடாது என்பதற்காக சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளையும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் . பல்வேறு இடங்களில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல்

சென்னையிலிருந்து நேற்று இரவு நெல்லை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி செந்தில் பாலமனி தலைமையில் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரம் போலீஸார் உதவியுடன் சோதனை நடத்தினர்.

உதவி கமிஷனர் தலைமையில் போலீசார்

அப்போது ரயிலில் பயணம் செய்த சென்னை கொளத்தூர் திரு .வி .க நகர் சேர்ந்த சதீஷ் (வயது33). அவரது தம்பி நவீன் (வயது 31). ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 25) ஆகிய மூன்று பேர் கொண்டு வந்த பைகளை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. உடனடியாக மூன்று பேரையும் பணத்துடன் தாம்பரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து தாம்பரம் காவல் நிலையத்தில் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

நயினார் நாகேந்திரன் உறவினரா ?

விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் , உள்ள ஹோட்டல் ஒன்றிலும் , அவரது உறவினர் சேப்பாக்கம் பகுதியில் நடத்தி வந்த ஹோட்டல் ஒன்றிலும் இருந்து பணத்தை நெல்லைக்கு கொண்டுசெல்வது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட சதீஷ் மற்றும் நவீன் இருவரும் சகோதரர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் வேலை பார்த்து வந்தனர். ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் நயினார் நாகேந்திரன் உறவினர் எனவும் கூறப்படுகிறது.

ரூ.3 கோடியே 99 லட்சம்

மூன்று பேரும் பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு கொண்டு சென்று திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தாங்கள் சொல்லும் நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என சொன்னதின் பேரில் பணத்தை கொண்டு சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் 3 கோடியே 99 லட்சத்தை தாம்பரம் காவல் நிலையத்தில் வருவாய் துறையினர் எண்ணிப் பார்த்து போலீசார் முன்னிலையில் தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்து விசாரணை

கைப்பற்றப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் இது தொடர்பாக வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் தாம்பரம் தாசில்தார் நடராஜன் தெரிவித்தார்.மூன்று பேர் மீதும் தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்ற வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் சமயத்தில் ஒரே நேரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் இது மேல்விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட ₹10 லட்சத்துக்கும் அதிகமான தொகை குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தும். அதன்படி, பறிமுதல் தொடர்பான அனைத்து தகவல்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறையினர் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.