Minister M. Subramanian alleged that the central government did not carry out the works for AIIMS hospital properly – TNN | எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை மத்திய அரசு முறையாக மேற்கொள்ளவில்லை


சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ. 43.65 கோடியில் அதிநவீன அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையை தருமபுரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, அம்மாப்பேட்டையில் சேலம் ஆட்சியா் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்த விழாவில், மேட்டூா் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆய்வுக் கூடம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான கல்பாரப்பட்டி துணை சுகாதார நிலையம், ரூ. 25 லட்சம் மதிப்பில் ஈ.காட்டூா் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் ஆகியவையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.31.08 கோடி மதிப்பீட்டில் செவிலியா் பயிற்சிப் பள்ளிக் கட்டடம் மற்றும் விடுதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 8,713 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1500 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், ஆயிரம் மையங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், 2500 கட்டிடங்கள் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் மருத்துவத்துறையின் கட்டமைப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்த மா.சுப்பிரமணியன், ஜெய்கா நிதி மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவமனைகள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிதியின் கீழ் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை மத்திய அரசு முறையாக மேற்கொள்ளாததால் அதற்கான நிதியையும் அவர்களால் பெற முடியவில்லை” என குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண

Source link