தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் இன்று இணைந்தார்.

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல யூடியூபர்:

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

பாஜகவை பலப்படுத்தும் வகையில் பல பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் இன்று பாஜகவில் இணைந்தார். நடந்து வரும் மக்களவை தேர்தலில் பீகாரில் உள்ள மேற்கு சம்பாரண் தொகுதியில் மணீஷ் காஷ்யப் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், அவர் பாஜகவில் இணைந்திருக்கிறார். வடகிழக்கு டெல்லி பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி முன்னிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மணீஷ் காஷ்யப் வரவேற்று பேசிய மனோஜ் திவாரி, "மணீஷ் காஷ்யப் பாஜகவில் இணைந்திருக்கிறார். அவரது தாயும் உடன் இருக்கிறார். அவர் மக்களின் பிரச்னைகளை எழுப்புகிறார்.

தமிழ்நாடு குறித்து வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?

எப்போதும் மோடிக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால், சில கட்சிகள் அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தன. ஆனால், பாஜக எப்போதும் அவருக்கு ஆதரவளிக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய மணீஷ் காஷ்யப், "இந்த வாய்ப்பை வழங்கியதற்கு பாஜகவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஏழைக் குடும்பத்தின் மகனுக்கு பாஜகவால் மட்டுமே இந்த கௌரவத்தை வழங்கியிருக்க முடியும். பீகாரில் சில கட்சிகள் உள்ளன. நீங்கள் (பண) சூட்கேஸ்களுடன் அணுகவில்லை என்றால் உங்களை தங்கள் கட்சியில் அவர்கள் இணைத்து கொள்ள மாட்டார்கள்.

ஏழைகள், பெண்கள், யூடியூபர், தாய் ஆகியோரை பாஜக மதிக்கிறது. எனவே, பாஜக வித்தியாசமான கட்சி. அதனால்தான் அது உலகின் மிகப்பெரிய திறமையான கட்சியாக உருவெடுத்துள்ளது" என்றார்.

யார் இந்த மணீஷ் காஷ்யப்?

மேற்கு சம்பாரனின் முஹ்னவா துமாரி கிராமத்தைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப், புனேவில் 2016 இல் சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, 2018 இல், ‘சச் தக் நியூஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார்.

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பியதாக யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது புகார் எழுந்தது. பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோக்களை வெளியிட்ட காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவர் மீது தமிழ்நாடு காவல்துறை மற்றும் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்ததையடுத்து அவர் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் சரணடைந்த பிறகு, தமிழ்நாடு காவல்துறையால் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் நான்கு மாதங்களுக்கு மேல் இருந்தார். பின்னர், அவர் மீண்டும் பீகாருக்கு அழைத்து வரப்பட்டு பாட்னாவில் உள்ள பீர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.