Manav Suthar

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது… தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்கு, “இல்லை சார், நிச்சயமாக அப்படி இல்லை” என யதார்த்தமாகப் பதிலளித்த அவர், தனது பந்துவீச்சின் வெற்றி ரகசியத்தையும், அந்த மறக்க முடியாத தருணங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கனவு நனவான தருணம்!

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான தருணம் எப்படிப்பட்ட உணர்வைத் தந்தது? எனும் கேள்விக்கு, “அது உண்மையிலேயே நம்ப முடியாத ஒரு தருணம். இந்தியாவுக்காக விளையாட வேண்டும், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆரம்ப காலத்திலிருந்தே இருந்த கனவு. அதனால் அந்தத் தருணம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்கிறார் மனவ் சுதர்.

பந்துவீசுவதற்கு முன்பே பேட்டிங் செய்ய களமிறங்கியது பதற்றத்தைக் குறைத்ததா என்ற கேள்விக்கு, “இல்லை. நான் பேட்டிங் செய்யச் சென்றபோது கூட மிகவும் சௌகரியமாகவே உணர்ந்தேன். சில பந்துகளை எதிர்கொண்டபோதே, இந்த விக்கெட் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். பின்னர் பந்துவீச வந்த முதல் ஓவரிலேயே அதே உணர்வுதான் கிடைத்தது. அதன்பிறகு, சரியான லைன், லென்த் மற்றும் வேகத்தில் தொடர்ந்து பந்துவீசுவதில் மட்டுமே எனது முழு கவனமும் இருந்தது,” எனக் குறிப்பிட்டார்.

Manav Suthar

ஸ்டாக் பால் தந்த வெற்றி!

“ஆரம்பத்தில் விக்கெட்டின் தன்மையைப் புரிந்து கொள்ளவே விரும்பினேன். அதனால்தான் எனது ஸ்டாக் டெலிவரியை நம்பியிருந்தேன். விக்கெட் சற்று மெதுவாக (Slow) இருக்கிறது, வேகத்தில் சில மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்துகொண்ட பிறகு, அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்யத் தொடங்கினேன். ஆனால், எனது ஸ்டாக் பாலை முடிந்தவரை வீரியமிக்கதாக மாற்றுவதுதான் எப்போதுமே பிரதான நோக்கமாக இருந்தது” என தனது சிம்பிளான, ஆனால் வெற்றிகரமான திட்டத்தை விளக்கினார்.

புதிய பந்து தந்த பெருமை!

போட்டியின் முக்கியமான கட்டத்தில் இரண்டாவது புதிய பந்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு அறிமுக வீரருக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம். “அது மிகவும் பெருமையான விஷயம். அந்தப் பொறுப்பை என் மீது வைத்து நம்பிக்கை வைப்பது எனக்கு நிறையவே அர்த்தத்தைக் கொடுக்கிறது,” என்கிறார்.

களத்தில் அவர் எடுக்க விரும்பிக் கைநழுவிப்போன ஒரு ரிவ்யூ பற்றிக் கேட்டபோது, “அது ஆட்டத்தின் வேகத்தில் எடுக்க நினைத்த ஒரு முடிவு. நான் நின்ற இடத்திலிருந்து பார்க்கும்போது அது அவுட் என்பது போலத் தெளிவாகத் தெரிந்தது. அதனால் ரிவ்யூ எடுப்பது சரியானதாக இருக்கும் என நினைத்தேன்.

இந்த ஆட்டத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம், ‘கன்சிஸ்டன்சி’தான் எல்லாம் என்பது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பந்துவீசிக்கொண்டே இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுதான் மிக முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன். இந்தப் ஃபார்மெட்டுக்கு நிறையப் பொறுமை தேவை. பொறுமையாக இருந்து, உங்கள் திட்டத்தில் உறுதியாக இருந்து, சரியான ஏரியாவில் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்பதைத்தான் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று முடித்தார் ஆட்ட நாயகன் மனவ் சுதர்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed