தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவு செய்யாமல், வெறும் பெயர் மாற்றக் கோரிக்கையை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. பட்டியல் பிரிவில் உள்ள 6 சாதிகளை அதிலிருந்து விலக்கிட வேண்டும் என 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றோம். இதுதான் முக்கியக் கோரிக்கை. இல்லாவிட்டால் எவ்விதப் பலனும் கிடைக்காது. சாதி ஒழிப்பின் முதல் படியாக பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றத்தைப் பார்க்கிறோம் என தொடர்ந்து அச் சமுதாய மக்கள் போராடி வருகின்றனர்.
மேலும், எந்த சமூகத்திற்குத் தங்களைச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள தெரியவில்லையோ அந்தச் சமூகம் வெற்றி பெற முடியாது. தேவேந்திரகுல வேளாளர்களுக்கான அரசியல் அதிகாரம் தமிழக அரசியலில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. தமிழக அமைச்சரவையில், ஒரே ஒரு ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே, ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்களது புகாராக இருந்து வருகிறது.
அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் நிலையில் தாழ்ந்த சாதி என கூறி ஒரு பிரிவினரை பிரிப்பது ஏன்? பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற்றப்படுவதால் யாருடைய இட ஒதுக்கீட்டிற்கும் இடையூறு இருக்காது என்றும் அந்த சமூகத்துக்கு 6 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது தான் தங்களின் கோரிக்கை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் காலத்தில் போராட்டத்தை முன்னெடுத்தால், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படலாம் என்ற அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ‘பட்டியல் வெளியேற்றம் இல்லை என்றால் வரும் தேர்தலை புறக்கணிப்போம்’ என்றும் ‘பட்டியல் வெளியேற்றம்’ ‘எம் இனத்தின் விடுதலை’ என வாசகங்கள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 10% இட ஒதுக்கீட்டுடன் எங்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்பவர்களுக்கே எங்களது ஆதரவும் எனவும், எந்த அரசியல் கட்சியையும் தாங்கள் ஆதரிக்கப் போவது இல்லை எனவும், எஸ். சி பட்டியலில் இருந்து வெளியேறும் வரை வருகின்ற தேர்தல் அனைத்தையும் புறக்கணிக்க போவதாகவும் பரபரப்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
பெயர் மாற்றம் வேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் இச்சமுதாய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், பட்டியல் வெளியேற்றம் என்பதை நிராகரித்து, பெயர் மாற்றம் மட்டுமே செய்து விட்டு கோரிக்கையை நிறைவேற்றி விட்டதாக தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்கிறார்கள். ஆனாலும், பட்டியல் வெளியேற்றம் என்ற அவர்களது கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருப்பதாக இதன் மூலம் தொடர்ந்து வெளி உலகத்துக்கு தெரிவிக்கின்றனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா அல்லது தேர்தல் புறக்கணிக்கப்படுமா என்பது போக போகத்தான் தெரியும்.
மேலும் காண