Lok Sabha Election 2024 ADMK give 4 seat to contest DMDK know full details here | Lok Sabha Election 2024: தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க.?


நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மத்தியில் ஆட்சியை கைப்பற்ற மீண்டும் பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்துள்ள ஆட்சியை மீண்டும் அடைய காங்கிரஸ் கட்சி அடங்கிய இந்தியா கூட்டணியும் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.
அ.தி.மு.க. – தே.மு.தி.க.:
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தொகுதிப் பங்கீட்டில் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் எந்தவொரு பெரிய கட்சிகளும் இதுவரை இடம்பெறவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க.வினர் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில். தங்கள் பக்கம் தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க. முழுமூச்சில் பணியாற்றி வருகின்றனர்.
4 தொகுதிகள் ஒதுக்கீடா?
அ.தி.மு.க. – தே.மு.தி.க. தரப்பிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மாலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். தே.மு.தி.க. தரப்பில் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்க தே.மு.தி.க. முன்வந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்பட 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தே.மு.தி.க. தலைவரும் மக்களால் அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்தாண்டு இறுதியில் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் தொண்டர்களை கவர வியூகம்:
இதனால், தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் இடம்பிடிக்க வைப்பதால் விஜயகாந்த் தொண்டர்களும், ரசிகர்களும், விஜயகாந்த் மீதான அனுதாப வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என்று அ.தி.மு.க. எதிர்பார்க்கிறது. இதனால், தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வை இடம்பிடிக்க வைக்க அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது. அதேசமயம், தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதால் அவர்கள் அதிக தொகுதிகளை அ.தி.மு.க. தரப்பில் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணி தங்கள் கூட்டணி கட்சியினரிடம் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சூழலில், அ.தி.மு.க.வினர் தங்கள் கூட்டணி கட்சியையே இன்னும் உறுதி செய்யாமல் இழுபறியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம், பா.ஜ.க.வினரும் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Lok Sabha Polls 2024 Date: 7 கட்டங்களாக நடத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தல்: மார்ச் 14,15ல் வெளியாகிறது தேதி அட்டவணை?
மேலும் படிக்க: Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! பீகாரில் பா.ஜ.க. – ஜனதா தள கூட்டணிப் பங்கீடு எப்படி?

மேலும் காண

Source link