17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் தொடங்கினர். இருவரும் முதல் 10 பந்துகளை பேட்டில் எதிர்கொள்ளவே இல்லை, ஆனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் கணக்கில் 10 ரன்கள் சேர்ந்திருந்தது. காரணம் டெல்லி பந்து வீச்சாளர்கள் 10 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கி இருந்தனர்.

அதன் பின்னர் அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை விளாசி கொல்கத்தா அணியின் பேட்டிங் கியரை அதிரடிக்கு மாற்றினார் பிலிப் சால்ட். ஆனால் அதன் பின்னர் சுனில் நரேன் அதிரடியாக பவுண்டரியும் சிக்ஸரும் விளாசி டெல்லி அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்தார். பவர்ப்ளே முடியும்போது கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 88 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் நரேன் 21 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியிருந்தார்.

அதன் பின்னரும் டெல்லி அணியின் கேம் ப்ளான் எந்தவிதமான பலனையும் தாக்கத்தையும் போட்டியில் ஏற்படுத்தவில்லை. இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து கொண்டே போனது. 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்து 141 ரன்கள் சேர்த்திருந்தது. அதேபோல் தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ரகுவன்ஷியும் மட்டையைச் சுழற்ற பவுண்டரி மைதானம் முழுவதும் சென்றது. இவர்கள் கூட்டணியை பிரிக்கவே முடியாது என யோசிக்க வைக்கும் அளவிற்கு இருவரும் விளையாடினர்.

ஒருவழியாக இவர்கள் கூட்டணியை மிட்ஷெல் மார்ஷ் பிரித்தார். ஆனால் அதற்குள் இந்த கூட்டணி 48 பந்தில் 104 ரன்கள் குவித்திருந்தது. சுனில் நரேன் தனது விக்கெட்டினை 39 பந்தில் 7 பவுண்டரி 7 சிக்ஸர் விளாசி 85 ரன்கள் குவித்திருந்த நிலையில் வெளியேறினார்.

அதன் பின்னர் ரகுவன்ஷி அதிரடியான ஆட்டத்தினை வெளிபடுத்தி 25 பந்தில் தனது அரைசதத்தினை விளாசினார். இந்த போட்டி இவரது அறிமுகப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அரைசதம் கடந்த பின்னர் ரகுவன்ஷி தனது விக்கெட்டினை இழக்க, களத்தில் ரஸலும் ஸ்ரேயஸ் ஐயரும் இணைந்தனர்.

இந்த கூட்டணியும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விளாச ஸ்கோர் சீராக இருக்கவே செய்தது. 13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 181 ரன்கள் குவித்திருந்தது. அதிரடி குறையாத காரணத்தால் கொல்கத்தா அணி 15.2 ஓவரில் 202 ரன்கள் சேர்த்தது.

ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை இழந்த பின்னர் களத்திற்கு வந்த ரிங்கு சிங் 8 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 27 ரன்கள் குவித்து அசத்தினார்.போட்டியின் 19வது ஓவரில் கொல்கத்தா அணி 264 ரன்கள் சேர்த்து ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 20வது ஓவரின் முதல் பந்தில் ரஸல் தனது விக்கெட்டினை இழக்க, மூன்றாவது பந்தில் ரம்ந்தீர் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.