கரூர் மேலப்பாளையம் அருகே அமைந்துள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதி பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்போம் என போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம் மேலப்பாளையம் பஞ்சாயத்து வடக்கு பாளையம் கிராமத்தில் உள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப் பகுதியில் பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்று கூறி இதனை கண்டித்து தேர்தலை புறக்கணித்து பேனர் வைத்தும், வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எங்கள் பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி, தார் சாலை வசதி, பொது இடத்தில் சிறிய கோவில் கட்டிக் கொள்ள அனுமதி, தினசரி துப்புரவு பணியாளர் வருகை உள்ளிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சட்டமன்ற உறுப்பினர் முதல் கவுன்சிலர் வரை தங்கள் பகுதிக்கு வந்து கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு. தங்கள் பகுதியில் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிக்கை என்ன ஆச்சு பல்வேறு அடிப்படை வசதிகள் எங்கள் பகுதியில் நிறைவேற்றவில்லை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
மேலும் இது சம்பந்தமாக சுமார் இரண்டு மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களில் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேச்சுவார்த்தையில் இன்னும் பத்து நாட்களுக்குள் தங்களுடைய அத்தியாசிய தேவைகள் அனைத்தும் முடிந்த அளவிற்கு நிறைவேற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மேலப்பாளையம் ஊராட்சி தலைவர் வெண்ணிலா அவரிடம் விளக்கம் கேட்டபோது அப்பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் நீர் தேக்க தொட்டி பணிகள் இரண்டு முறை தொடங்கப்பட்ட நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த இடத்தில் புகார் கூறியதை அடுத்து தற்போது மூன்றாவது ஒரு இடத்தில் பணிகள் துவங்கி ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது போதிய பண்டு (பணம்) இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வரும் கூட்டத்தில் நிதி பெறப்பட்டு அந்த பணிகளும் கூடிய விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மேலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா தெரிவித்தார்.
மேலும் சம்பவ இடத்தில் பொதுமக்கள் சாமினா பந்தல் அமைத்து எங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை நாங்கள் காத்திருக்கிறோம் என தங்கள் கருத்துக்களை கூறி அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் ஒரு வார காலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பொதுமக்களின் திடீர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் பணிக்காக அனைத்து அதிகாரிகளும் சென்று விட ஆயத்தமாக இருப்பதால் தேர்தல் தேதி அறிவித்த முன்பாகவே எங்களது பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண