IPL 2024 RCB Team SWOT Analysis 2024 Royal Challengers Bangalore Strength Weakness virat kohli | RCB SWOT Analysis: மனங்களை வெல்லும் பெங்களூர


RCB SWOT Analysis: ஐ.பி.எல். வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை சாதித்தது என்ன? சாதிக்க காரணங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் 2024:
இந்தியாவில் ஒவ்வொரு கோடை காலத்திலும் தவிர்க்க முடியாத, விளையாட்டு திருவிழாவாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் பணம் புரளும் விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல், இதுவரை 16 சீசன்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தொடக்கத்தில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றன. நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இதுவரை இந்த தொடரில் சாதித்தது என்ன? அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூர் அணி:
இதுவரை நடந்து முடிந்த 16 ஐபிஎல் சீசன்களிலும் பெங்களூர் அணி விளையாடியுள்ளது. 2013ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள், நட்சத்திர வீரர் விராட் கோலி அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். சிறப்பான செயல்பாடாக இந்த அணி 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தாலும், ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. அதேநேரம், மொத்தமாக 8 முறை அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஒரு தொடரில் அதிக ரன்கள் சேர்த்ததற்கான ஆரஞ்சு தொப்பியை, பெங்களூர் அணிக்காக விளையாடி 3 பேர்  வென்றுள்ளனர். அதேநேரம், ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்ததற்கான ஊதா தொப்பியை, பெங்களூர் அணிக்காக ஒருவர் மட்டுமே வென்றுள்ளார். வெற்றியோ, தோல்வியோ பெங்களூர் அணியின் போட்டியை காண சென்றால், அட்டகாசமான பேட்டிங்கை காண முடியும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
கோலி எனும் ”ரன் அரக்கன்”
16 சீசன்கள் விளையாடி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும், இன்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் பெங்களூர் அணியின் பின் திரள ஒற்றை முக்கிய காரணம் விராட் கோலி எனும் ரன் அரக்கன் தான். களத்தில் இவர் இருந்தால் போதும், எப்படிப்பட்ட ஒரு கடினமான ரன் சேஸிங்கும் சாதாரணமானது தான். அதற்கு உதாரணமாக தான் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில், கோலியின் பெயர் முதலிடத்தில் உள்ளது. கேப்டனாகவும் அணியை ஆக்ரோஷமாக வழிநடத்தி கவனம் ஈர்த்து இருந்தார். பெங்களூரு அணி வீரர்களை முறைக்கவே எதிரணி சற்று யோசிக்கும் என்றால், அதற்கு காரணமும் கோலி தான். ஏனென்றால் எதிரணியினர் செயலுக்கு அசலும், வட்டியுமாக பேட்டிங்கில் திருப்பி கொடுக்கும் வல்லமை கொண்டவர். பிளேயிங் லெவனில் உள்ள வீரர்கள் மட்டுமல்ல, மைதானத்தில் குவிந்து இருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் உற்சாக டானிக் கோலி தான்.  
பெங்களூர் அணியின் பலம்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் என்பது பொழுதுபோக்கு அம்சத்திற்காக உருவாக்கப்பட்டது. அந்த பொழுதுபோக்கை உறுதி செய்வதில், பெங்களூர் அணியின் பங்களிப்பு அளப்பரியது. காரணம் மற்ற எந்தவொரு அணியை காட்டிலும் அதிரடிக்கு பெயர் போன வீரர்கள் பலர் இடம்பெற்று இருந்தது, இருப்பது பெங்களூர் அணியில் தான். அதன் விளைவாகவே ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான சதம், ஒருநபரின் அதிகபட்ச ஸ்கோர், ஒரு தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர், ஒரு போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் என, பேட்டிங் தொடர்பான பெரும்பாலான சாதனைகளையும் அந்த அணியே வசப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த அணியாக இல்லாவிட்டாலும், தனிநபராகவே அணிக்கு வெற்றியை பெற்று தரக்கூடிய தரமான வீரர்களை அந்த அணி ஏலத்தில் எடுப்பது தொடர்கதையாக உள்ளது. இப்படிபட்ட அதிரடியான பேட்டிங் லன் -அப்பிற்கு ஏற்றவாறு, அந்த அணியின் பெரும்பாலான போட்டிகள் பெங்களூரு மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 
பெங்களூர் அணியின் பலவீனம்:
தனிநபர்களாகவே வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வீரர்கள் இருப்பது அந்த அணியின் பலம் என்று கருதினாலும், அதுவே அந்த அணியின் பெரும் பலவீனமாக கருதப்படுகிறது. காரணம் இக்காட்டான சூழலில் ஒரு அணியாக சேர்ந்து வெற்றியை பெற முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகிறது. பிளே ஆஃப் போன்ற முக்கிய போட்டிகளில் பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே, அணியாக சிறப்பாக செயல்பட முடியாமல் போவது தான். இரண்டாவது மிகப்பெரிய பலம் என்பது, அந்த அணியின் பந்து வீச்சுதான். என்ன தான் உலகத்தரத்திலான பேட்ஸ்மேன்களை ஏலத்தில் எடுத்து சரியான கலவையில் பேட்டிங் ஆர்டரை உருவாக்கினாலும், அதற்கு ஈடான பவுலிங் லைன் – அப்பை உருவாக்க முடியாமல் பெங்களூர் அணி தடுமாறி வருகிறது. நடப்பு தொடரில் கூட அந்த பிரச்னை தொடரும் என்றே தெரிகிறது. இந்திய மைதானங்களை நன்கு அறிந்த உள்ளூரைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் அந்த அணியில் இல்லை. பல நேரங்களில், அணியின் வெற்றிக்கு கோலி தான் ஆடியாக வேண்டும் என, அவரையே சார்ந்து இருப்பதும் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இறுதியாக, விளையாட்டில் லக் என்பதும் அவசியம் தான். அந்த வகையில் 16 ஆண்டுகளில் ஒரு சீசனில் கூட பெங்களூர் அணிக்கு லக் அடித்ததாக தெரியவில்லை.
மொத்தத்தில் பெங்களூர் அணி எப்படி?
வழக்கம்போல பெங்களூர் அணி இந்தமுறையும் வலுவான பேட்டிங் லைன் – அப்பை கொண்டுள்ளது. இதனால், அதிரடியான பேட்டிங்கிற்கு எந்த பஞ்சமும் இருக்காது. ஆனால், பந்துவீச்சு சரியான கலவையில் இல்லை என்றே தெரிகிறது. இதனால், நடப்பு தொடரிலும் பெங்களூர் அணிக்கு பந்துவீச்சு பெரும் சவாலாக அமையும் என கருதப்படுகிறது.

மேலும் காண

Source link