Governor RN Ravi Dropout Vice Chancellor Search Committee | Governor RN Ravi: துணைவேந்தருக்கான தேடுதல் குழு: திரும்ப பெற்ற ஆளுநர் ரவி

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவைத் திரும்பப் பெறுவதாக ஆளுநர் மாளிக்கை தெரிவித்துள்ளது.
 
தற்போது சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்காக  துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான குழுவை அமைத்து ஆளுநர் ஆர். என்.ரவி உத்தரவிட்டார். இந்த குழுவில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 
 
வழக்கமாக மாநில அரசே, துணை வேந்தர்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். ஆனால், முதன் முறையாக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற்றிருந்தார்.
 
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆளுநரின் நடவடிக்கை குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றார். இது தொடர்பாக  தமிழக உயர்கல்வித்துறை சார்பில் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தில், “துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசி-யின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல்குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இருப்பினும் ஆளுநர், தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. அவர் சம்பந்தப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உறுப்பினர்களைக்கொண்ட நான்கு பேர் அடங்கிய தனித் தனிக் குழுக்களை, துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்காக அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை முதலமைசர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதேநேரம் உச்சநீதிமன்ற விசாரணையில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசும், ஆளுநரும் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்றது.துணைவேந்தர்களை தேடுதல் செய்யும் குழுவில் யுஜிசி பிரதிநிதியை நீக்கி தமிழக அரசால் அரசாணை வெளியிட்டப்பட்டது.  
 
இந்த சூழலில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை திரும்ப பெறுவதாக ஆளுநர் மாளிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை தேவை. பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து தேடுதல் குழுவை தமிழக அரசு நியமிக்கும் என நம்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது. 
 

Source link