இந்தியாவை பொறுத்தவரையில், மக்களவை தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை, தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையிடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது.

மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புது சட்டம்:

இப்படியிருக்க, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சீர்திருத்தம் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, "பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்" என தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் சட்டம் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்கூர் வழக்கு தொடர்ந்தார்.

நிலைபாட்டை மாற்றாத உச்ச நீதிமன்றம்:

இந்திய தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அமைச்சரை நியமித்திருப்பதன் மூலம் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம், 2023, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்துள்ளது என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தடை வதிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும் (Association for Democratic Reforms) வேறொரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்திற்கு தடை விதிக்க இரண்டாவது முறையாக மறுப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக நிலுவையில் இருக்கும் மற்ற மனுக்களுடன் சேர்த்து, தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.