சென்னை: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்று மதுராந்தகம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மாமண்டூரில் பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கிய விஜய், பிரசார வாகனத்தில் கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலுடன் இணைந்து மதுராந்தகம் நோக்கிச் சென்றார்.
இந்தப் பயணத்தின்போது 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 39 இடங்களைக் கடந்து விஜய் பொதுமக்களை சந்தித்தார். சாலையோரங்களிலும் வீடுகளின் முன்பாகவும் திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி கையசைத்து, வணக்கம் தெரிவித்து, கட்சியின் விசில் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
பல இடங்களில் விஜயை வரவேற்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தேநீர் கடையில் பொதுமக்களுடன் சந்திப்பு
சில இடங்களில் பிரசார வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், எல். எனத்தூர் பகுதியில் உள்ள சிறிய தேநீர் கடையில் தேநீர் அருந்தியதுடன், அங்கிருந்த வயதான பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
அவருடன் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் வேட்பாளர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் சென்றனர்.
விவசாயிகளுடன் நேரடி சந்திப்பு
கிளியாநகரில் விவசாய நிலத்திற்குள் சென்ற விஜய், அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேசினார்.
தொடர்ந்து ராமாபுரத்தில் உள்ள வயல்வெளியில் விவசாயி ஒருவரின் டிராக்டரை விஜய் ஓட்டினார். அதன் பின்னர் தனது பிரசாரப் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார்.
அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது காரணமாக அமைந்தது.
தற்போது இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

























Worth flagging that the post handled an angle of the topic I had not seen elsewhere, and a look at…