Chennai airport 14 kg of high-grade hydroponiccannabis seized worth Rs 7 crore – TNN | Chennai Airport: 14 கிலோ, ரூ.7 கோடி மதிப்பு.. மிகவும் உயர்தர கஞ்சா


தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.7 கோடி மதிப்புடைய, 14 கிலோ உயர் ரக, “ஹைட்ரோ போனிக்” கஞ்சா இருந்த சூட்கேஸை, சென்னை விமான நிலைய கன்வயர் பெல்டில் போட்டுவிட்டு, தப்பி ஓடிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, போதைப் பொருள்கள் கடத்தல் பயணியை, சென்னை விமான நிலைய சுங்க  அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதற்கிடையே இந்த விமானத்தில் வரும் ஒரு பயணியின் சூட்கேசில், போதைப்பொருள் இருப்பதாக, பாங்காக் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்,  கண்டுபிடித்து, போதைப் பொருள் இருக்கும் சூட்கேஸில், அடையாள குறி போடப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் அந்த சூட்கேஸை கன்வேயர் பெல்ட்டில் இருந்து எடுக்கும் பயணியை பிடித்து விசாரணை நடத்தும் படியும், தாய்லாந்து நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து டெல்லியில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், வியாழக்கிழமை அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையம், வருகை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு குறிப்பிட்ட அந்த தாய் ஏர்வேஸ் விமான பயணிகளின் லக்கேஜ்கள் வரும் கன்வேயர் பெல்ட்டை  தீவிரமாக கண்காணித்தனர்.
இதற்கிடையே அந்த கன்வேயர் பெல்டில் வந்த லக்கேஜ்களை பயணிகள் எடுத்துச் சென்றனர். ஆனால் ஒரு சூட்கேசில், வெள்ளை கலர் ஷாக்பிஸ் மார்க் செய்யப்பட்டிருந்தது. அந்த சூட்கேஸை யாருமே எடுக்கவில்லை. அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளும் தங்கள் உடைமைகளை எடுத்து சென்று விட்டனர். ஆனால் அந்த ஒரு சூட்கேஸ் மட்டும், கன்வேயர் பெல்ட்டில், கேட்பாரற்று யாரும் எடுக்காமல் கிடந்தது.
எனவே சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த சூட்கேஸை எடுத்து, திறந்து பார்த்தனர். அதனுள் மிகவும் உயர்ரக கஞ்சாவான “ஹைட்ரோ போனிக்” ரக கஞ்சா இருந்தது. இது வெளிநாடுகளில் தரையில் வளராமல், தண்ணீரிலே மிதந்து கொண்டு வளரும் உயர் ரக கஞ்சா. அந்த சூட்கேசில், ஹைட்ரோ போனிக் என்ற பதப்படுத்தப்பட்ட உயரக கஞ்சா, 14 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 7 கோடி.
இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த சூட்கேசில் இருந்த டேக் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சூட்கேஸ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பயணியுடையது  என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் ரூ.7 கோடி மதிப்புடைய உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் ஆசாமி, சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் தன்னை கையும் களவுமாக பிடிக்க தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, ரூ. 7 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா போதை பொருள் அடங்கிய சூட்கேஸை எடுத்துச் செல்லாமல், சென்னை விமான நிலையத்திலேயே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார் என்று தெரியவந்தது.
இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு சென்னை விமான நிலைய போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியோர்க்கும் தகவல் கொடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த போதை கடத்தல் பயணியை, கைது செய்ய தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும் காண

Source link