Breaking : விழுப்புரத்தில் பரபரப்பு… மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் பிற தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காப்பியடிக்க கல்வி அலுவலர்கள் உதவுவதாக புகார்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதுபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பொதுத்தேர்வுகளில் அதிகளவில் மாணவர்கள், பாடம் வாரியாக தேர்ச்சி எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும், 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையிலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சாதகமாக தேர்வு பணியில் ஈடுபடும் சில முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்து வந்தன.

மாணவர்கள் காப்பியடிக்க பள்ளி ஆசிரியர்களே உதவி

கடந்த காலங்களில் நடந்த அரசு பொதுத்தேர்வுகளில் பணியில் இருந்த அதே தேர்வு மையங்களுக்கு விருப்பப்பட்டு கேட்டு தேர்வுப்பணியில் ஈடுபடுவது மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அப்பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்கள் காப்பியடிக்க பள்ளி ஆசிரியர்களே உதவி செய்வதும், அதற்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் உடந்தையாக இருந்ததோடு, மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமலும், அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், மேலும் இப்பள்ளிகளில் பறக்கும் படை அலுவலர்களை குறைந்த எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்தியதாகவும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து சென்னை அரசு தேர்வுகள் இயக்குனரகத்திற்கும், பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டது.

கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

இதையடுத்து அந்த புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அலுவலர்களை உடனடியாக வேறு தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யும்படியும் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அரசு தேர்வு இயக்குனரகம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். இதில் விழுப்புரம் நகரம் மட்டுமின்றி, திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 9 தனியார் பள்ளி தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பியடிக்க அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களே உதவி செய்ததும், அதனை தேர்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் தடுக்க தவறியதோடு தங்களுடைய அரசு பணியை செய்யாமல் தனியார் பள்ளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

9 கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

இதையடுத்து 9 தனியார் பள்ளி தேர்வு மையங்களில் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முதன்மை கண்காணிப்பாளர்கள் 9 பேரை அப்பள்ளிகளில் இருந்து அரசு பள்ளி தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்களுக்கு பதிலாக மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு அரசு பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அலுவலர்கள், புகார்களுக்குரிய 9 தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு தேர்வுப்பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டனர்.

பெற்றோர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பெயர் பெற்று வருகிற நிலையில் இதுபோன்று அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் காப்பியடிக்க பள்ளி நிர்வாகமே உதவி செய்வதால் கல்வியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தரம் தாழ்ந்த செயலில் தனியார் பள்ளிகள்

சில தனியார் பள்ளிகளின் இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களின் கல்வித்தரம், அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று கல்வியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் இதுபோன்ற செயல்பாடுகளை முற்றிலும் தடுக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் பள்ளிகளின் தடபுடலான கவனிப்பு…

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் காப்பியடித்து எழுதுவதை கண்டுகொள்ளாமல் இருக்க தேர்வுப்பணியில் ஈடுபட்டு வரும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அந்தந்த பள்ளி நிர்வாகம், சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது போன்று உபசரித்துள்ளது. சைவ உணவா, அசைவ உணவா என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு, கேட்டு உபசரித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களுக்கு பரிசுப்பொருட்களையும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link