<p>கடந்த சில நாட்களுக்கு குன் பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு மின் அஞ்சல் மூலம் மிரட்டலை விடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>
<p>பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி மதியம் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உளுக்கியது. இந்த நிலையில் உணவகத்தில் வெடிகிண்டு வைத்தது போலவே பேருந்து நிலையம், ரயில் நிலையம், வழிப்பாட்டு தளங்கள், பொது இடங்களில் வெடிகுண்டு வைப்போம் என மின் அஞ்சல் மூலம் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார், பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் ஆகியோருக்கு மின் அஞ்சல் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களுக்கு சுமார் ரூ.20.7 கோடி பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓட்டலில் குண்டுவெடிப்பு நடந்துள்ள நிலையில், தற்போது மர்மநபர்கள் பெங்களூரு நகருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பெங்களூருவாசிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.</p>
<p>இதுதொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெங்களூரு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் நகரில் இருக்கும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோயில், மக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<p>உணவகத்தில் வெடித்தது வெடிபொருளா அல்லது சிலிண்டரா என என்.ஐ. ஏ சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிகவும் வீரியம் கொண்ட IED ரக வெடிகுண்டு என வெடிகுண்டு பரிசோதனைக்குழு கூறியதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். மேலும் அவர், வாடிக்கையாளர் போல வந்த ஒருவர்தான் பையை விட்டுச் சென்றுள்ளார். அந்த பையில் இருந்துதான் வெடிகுண்டு வெடித்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார். </p>