கோட் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்திருப்பதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.
பிரசாந்த் பிறந்தநாள்:
நடிகர் பிரசாந்த் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளன்று தனது ரசிகர்களையும் பத்திரிகை நண்பர்களையும் சந்தித்து வருகிறார் அவர். இந்த நாளில் தனது நற்பணி மன்றம் சார்பாக ரசிகர்களுக்கு சமூக சேவைகளை செய்தார். அந்த வகையில் இந்த முறை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார் பிரசாந்த்.
இலவசமாக தலைக்கவசம்
இது குறித்து அவர் பேசுகையில் ” ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பிறந்த நாளன்று என்னுடைய பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு என்னுடைய குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் சந்திப்பேன். அடுத்ததாக என் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருக்கும் என் ரசிகர்களையும் இத்தனை வருடங்களாக என்னுடன் பயணித்து வரும் பத்திரிகையாளர் நண்பர்களையும் சந்திப்பதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். என் பிறந்தநாளுக்கு இன்று அதிகாலையில் இருந்து செல்ஃபோனில் அழைத்து வாழ்த்து தெரிவித்த திரைத்துறை நண்பர்களுக்கும், என்னை வாழ்த்த வந்த பத்திரிகையாளர் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளன்று ஏதாவது ஒரு சின்ன உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். அந்த வகையில் இந்த முறை இலவசமாக தலைக்கவசம் வழங்க முடிவுசெய்தோம். இங்கு இருக்கும் எத்தனையோ பேர் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள் . தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து ஓட்டுங்கள். அது உங்களுக்கும் உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லது.” என்று கூறினார்.
அந்தகன் அப்டேட்
தான் நடித்துள்ள அந்தகன் படம் குறித்தும் பேச பிரசாந்த் ” அந்தகன் படம் நாங்கள் பெரிய பட்ஜெட் செலவு செய்து எடுத்திருக்கிறோம். படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதனால் அதற்கு ஏற்ற ஒரு நல்ல ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறோம். நிறைய இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். இனிமேல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறேன் நீங்கள் பார்க்கதான் போகிறீர்கள். ”
கோட் அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படம் குறித்து பேசிய அவர் ” கோட் படம் சிறப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அனைவரது கதாபாத்திரமும் சிறப்பாக அமைக்கப் பட்டிருக்கின்றன. நிச்சயமாக படம் எல்லாருக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும் ” என்று அவர் தெரிவித்துள்ளார்
மேலும் காண