மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. சோலாப்பூர் உட்பட சில மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்து இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் போதிய அளவு விவசாய பணிகள் நடக்கவில்லை.
தற்போது பருவமழை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இனி அதிகபடியான மழை பெய்து பற்றாக்குறையான மழையைச் சரி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து மழை குறைவாக உள்ள தாலுகாக்கள் குறித்து மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தியது.
மழைப்பற்றாக்குறை மற்றும் வறண்ட வானிலை காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திலுள்ள 358 தாலுகாக்களில் 265 தாலுகாக்களை வறட்சிப் பகுதிகளாகச் மாநில அரசு இன்று அறிவித்தது.
இது மாநிலத்தின் பரப்பளவில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கை உள்ளடக்கியதாகும். மழைப்பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் ஜூன் மாதம் முதல் 265 வட்டங்களில் வறட்சி போன்ற சூழல் நிலவுவதாக வேளாண் ஆணையர் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
பருவமழைக் காலத்தில் மழையின்றி குறைந்தது 21 நாட்கள் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவினால் அது வறட்சி பகுதியாக அறிவிக்கப்படும்.
மாநில அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பயிர் சேதம் குறித்த உடனடி மதிப்பீடு, விவசாயிகளுக்கான பல்வேறு நிவாரணம், நில வருவாய் வரி தள்ளுபடி, பயிர்க் கடன்களை மறுசீரமைத்தல் மற்றும் விவசாயம் சார்ந்த கடன்களை வசூலிப்பதை நிறுத்திவைத்தல் ஆகியவற்றை செயல்படுத்த வழிவகுக்கிறது.
இருப்பினும், பயிர் சேதத்திற்கான நிதியுதவி குறித்த விவரங்கள், மதிப்பீடு நிறைவடைந்த பிறகு தனியாக அறிவிக்கப்படும். நேரடியாக ஆய்வு செய்து பயிர் சேத மதிப்பீட்டை உடனடியாகத் தொடங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிர் நிலவரங்களை ஜிபிஎஸ் துணையோடு மதிப்பிட்டு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆவணப்படுத்தி, வேளாண் ஆணையர் மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விவசாய கடன் வசூலிப்பை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதோடு விவசாயிகளின் பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாய மின்சாரக் கட்டணங்கள் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7.5 குதிரைத்திறன் (HP) வரையிலான விவசாய மின் மோட்டார்களுக்கான கட்டணங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதிக திறன் கொண்ட மோட்டார்களுக்கும் இனி சலுகைகள் வழங்கப்படும்.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள கிராமங்களில் உள்ள விவசாய மின் மோட்டார்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்படாது.

























A relief to read something where I did not have to fact check every claim mentally, and a look at…