இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் உதவியை நாடினோம். அவர்களின் தொடர் முயற்சியால் மட்டுமே காரமடையில் உள்ள மனநல காப்பகத்தில் அப்பெண் சேர்க்கப்பட்டார். இது முழுக்க முழுக்க எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளின் சொந்த முயற்சியால் சாத்தியமானது. ஆனால், கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ தான் நேரில் நின்று காப்பகத்தில் சேர்த்ததாகவும், த.வெ.க-வின் அறிவுறுத்தலால் தான் இது நடந்ததாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பொய்யான தகவல்களைப் பரப்பி உள்ளனர். நாங்க செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார். இதை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம்” என தெரிவித்தனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்க கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ-வை தொடர்பு கொண்டபோது, பதிலளிக்கவில்லை. இதனால் அவரது கணவர் சந்தோஷ்குமாரிடம் விளக்கம் கேட்டோம். “மசூதியில் இருந்து ஒரு கோரிக்கை வந்ததால் அப்பெண்ணை மனநல காப்பகத்தில் சேர்க்க எம்.எல்.ஏ பரிந்துரை கடிதம் தந்தார். அப்பெண்ணை நாங்களும், முஸ்லிம் நண்பர்களும் இணைந்துதான் காப்பகத்தில் சேர்த்தோம். அவர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் என்பது தெரியாது. நாங்கள் அப்பெண்ணை காப்பகத்தில் சேர்த்ததாக பத்திரிகைகளுக்கு நாங்கள் தகவல் தரவில்லை. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள்தான் தகவல் தந்துள்ளனர்” என்றார்.























