சீமான்


நாம் தமிழர் கட்சியில் பயணித்துவந்த மு.களஞ்சியம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தனது விலகலுக்கான காரணம் குறித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும், வேறொரு கட்சியில் இணையாமலும், புதிய கட்சி தொடங்காமலும் நீண்ட அமைதி காத்துவந்தார்.

இந்த நிலையில், தற்போது புதிய கட்சி தொடங்குவதற்கான முனைப்பில் அவர் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மு.களஞ்சியத்தை நேரில் சந்தித்துப் பேசினோம்…

“நா.த.க-விலிருந்து நீங்கள் வெளியேறியதற்கான காரணம் என்ன?”

“2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தேர்தல் தோல்வி குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், அதை கண்டுகொள்ளவே இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தாண்டி, வாக்கு சதவிகிதமும் குறைந்துபோய்விட்டது. எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரினேன். ஆனால், நா.த.க-வின் முதன்மை இடத்தில் இருக்கிறவர்களை வைத்து என்னை மோசமாக திட்டித் தீர்த்தனர்.

சீமான்

தேர்தல் தோல்விக்குப் பிறகு ‘எங்கே சறுக்கினோம்…’ என்ற ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, கட்சியை மறு கட்டமைப்பு செய்து தயார்படுத்தி வருகிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், நா.த.க-வில் எந்தத் தோல்விக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தியதே கிடையாது. அவரைச் சுற்றியிருப்பவர்களும் கட்சியினர் யாரும் சீமானை அணுகிவிட முடியாத வகையில் செயல்பட்டு வருகின்றனர். எனவே இனிமேலும் இந்தக் கட்சியில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்ற நிலையில், கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன்.”

“நா.த.க-வில் உங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற விரக்தியில்தான் வெளியேறிவிட்டதாக சொல்கிறார்களே…?”

“அரசியலில், பதவிகளுக்காக பயணிப்பவன் என்றால், ஆளுங்கட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிகளில் அல்லவா பயணித்திருப்பேன். தமிழ்த்தேசிய லட்சியத்துக்காக தனி இயக்கம் கண்டு அதை தொடர்ச்சியாகவும் நடத்திவந்தவன் நான்.

ஆனால், ஓர் அரசியல் கட்சிக்கே உரித்தான மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர், உட்கட்சி தேர்தல் என எந்தவித அடிப்படைக் கட்டமைப்பும் நா.த.க-வில் இல்லை.

கட்சியில் யார் இணைந்தாலும், எவ்வளவு நாள் பயணித்தாலும் ‘மாநில ஒருங்கிணைப்பாளர்’ என்ற பொறுப்பைத் தாண்டி யாருக்கும் எந்தப் பதவியும் கிடையாது. சுருக்கமாக சொன்னால், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தாண்டி வேறு எவருக்கும் கட்சியில் முக்கியத்துவம் இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களது ஒரே நோக்கம்.

இந்த குறைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்று கட்சிக்குள்ளிருந்தே குரல் எழுப்பினேன். உடனே, நான் கட்சிக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி, நா.த.க-வினர் திட்ட ஆரம்பித்தனர். முரண்பாட்டோடு பயணிக்க முடியாது என்ற நோக்கில், கட்சியிலிருந்து விலகிவிட்டேன்.”

“தமிழ்த்தேசியத்தை நோக்கிய பயணத்தில் ஒரு கட்சி எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், என்னென்ன செயல் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும், அரசியல் நிலைப்பாட்டை எவ்வாறு வகுத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்தவித அடிப்படை புரிதலோ, தேவையோ நா.த.க-வுக்குக் கிடையாது. சீமான் என்றொரு சர்வாதிகாரியின் கீழ் ‘ஏன்’ என்ற கேள்விக்கு இடமில்லாத ஓர் இயக்கமாகத்தான் நா.த.க நடத்தப்பட்டு வருகிறது.

மு.களஞ்சியம்

தேர்தலின்போது ஆண்களுக்கு நிகராக பெண்களையும் வேட்பாளர்களாக போட்டியிட வைக்கிறோம் என்று பெருமை பேசுகிறார்கள். 2026 தேர்தலிலேயே 117 பெண் வேட்பாளர்களை களமிறக்கினார்கள். அதில் பெரும்பான்மையோர் நா.த.க-வுக்கு சம்பந்தமே இல்லாத, அந்தந்த தொகுதியின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நபர்கள்தான். ஆணுக்கு சமானமாக பெண்களையும் கட்சிக்குள் வளர்த்தெடுக்காமல், தேவைக்கேற்றாற்போல் வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து போட்டியிட வைப்பதா சரிக்கு சமானம்? இப்படி கடைசி நேரத்தில், ஆள் கிடைக்காமல், கிடைத்தவர்களை எல்லாம் வேட்பாளராக்கினால், கட்சி எப்படி வெற்றி பெறும்?”

“அப்படியென்றால், சீமான் மீது உங்களுக்கு எந்தவித தனிப்பட்ட மோதலும் கிடையாது என்கிறீர்களா?”

“சீமானைத் திட்டுவது என் நோக்கமல்ல. அதேசமயம், கடந்த காலத்தில் நா.த.க-வில் பயணித்தவன் என்ற முறையில் அக்கட்சியிலிருந்து ஏன் வெளியேறினேன் என்ற விளக்கத்தைத்தான் நான் இப்போது தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

திராவிடத்தை ஒழிக்கப்போவதாக மேடையில் முழங்குகிற சீமான், தேர்தல் தோல்வி குறித்து ஆராயாமல், தேர்தலுக்குப் பிறகும் திருமண வீட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினோடு கொஞ்சிப் பேசி உறவாடுகிறார். கேட்டால், ‘இதுதான் மாண்பரசியல்’ என்று வகுப்பெடுக்கிறார். இதே பண்பாட்டை கட்சியிலுள்ள வேறொருவர் செய்தால், அவருக்கு ‘துரோகி’ பட்டம் கட்டி கட்சியிலுள்ள நபர்களை வைத்தே திட்டி பதிவுகள் போட வைக்கிறார். ஆக, தமிழ்த்தேசியம் என்று வெளியில் சொல்லிக்கொள்கிறவர், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியலுக்காக நா.த.க-வையும் அதன் அப்பாவித் தம்பிகளையும் இரையாக்கி வருகிறார்.

சீமான்

தமிழக அரசியல் சூழலில், தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகிற ஒரே கட்சியாக நா.த.க-வை அடையாளப்படுத்தி தனது சுயலாபத்துக்கான அரசியலை செய்துவருகிறார் சீமான். இந்த நிலையில், உண்மையான தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகிற கட்சியாக எனது தலைமையில் உண்மையான தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கும் நோக்கில், புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் நான் தற்போது ஈடுபட்டுள்ளேன்.”

“தமிழ்த் தேசிய கொள்கைக்காகவும் ஈழ அரசியல் விடுதலைக்காகவும் நா.த.க தொடர்ந்து களமாடி வருகிறதுதானே?”

“அப்படியொரு பிம்பத்தை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ‘விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம்’ என்று இலங்கை சொல்கிறது. ஐரோப்பிய நாடுகளில், 28 நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை நீக்கிவிட்டன. ஆனாலும் இந்தியாவில் இன்னும் தடை தொடர்கிறது, இணையத்தில் தேசியத் தலைவர் படத்தைக்கூட வைக்க முடியவில்லை. இந்த நிலையை மாற்றியமைக்க நா.த.க சார்பில் யாராவது பேசியிருக்கிறார்களா?

இந்தியா, இலங்கை என இரு நாடுகளுக்கு இடையிலான இறையாண்மையுடன் சம்பந்தப்பட்டது கச்சத்தீவு விவகாரம். இதுபோன்ற விஷயங்களில் சர்வதேச சட்டத்தை ஆராய்ந்து, ஓர் அரசு கொடுத்த நிலத்தை மீட்டெடுப்பதற்கான ஆக்கபூர்வ வழிகள் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்கபூர்வமான இந்த விஷயங்களில் எல்லாம் நா.த.க அக்கறை கொள்வதில்லை.

மாறாக, வெறுமனே மே 18 மாவீரர் நாளை சம்பிரதாயமாக கடைப்பிடிப்பதும், 20 வருடங்களுக்கு முன்பு ஈழம் பற்றி ராமேஸ்வரத்தில் பேசியதையே இப்போதும் மேடைதோறும் முழங்கிவருவதும் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வை ஏற்படுத்தித் தந்துவிடுமா என்ன? இந்த ஏமாற்று அரசியலை எத்தனை காலம்தான் செய்துகொண்டிருப்பார்கள்?”

“கடந்தகாலங்களில், இதுபோல் சீமானை விமர்சித்து நா.த.க-விலிருந்து வெளியேறியவர்களெல்லாம் த.வெ.க உள்ளிட்ட வேறு கட்சிகளில் இணைந்துவிட்டார்களே?”

“வேறு கட்சியில் சேருவதற்காக நாங்கள் நா.த.க-விலிருந்து வெளியேறவில்லை. உண்மையான தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்கும் நோக்கோடு வந்திருக்கிறோம்.

‘திராவிட எதிர்ப்பு’ என வெளியில் சொல்லிக்கொண்டு, த.வெ.க-வை மட்டும் எதிர்ப்பது, ஆர்.எஸ்.எஸ் அஜென்டாவுக்காக வேலை பார்ப்பது என போலி தமிழ்த் தேசியம் பேசுபவர்களை ஈழத் தமிழர்கள் வெறுக்கிறார்கள். ஆனாலும் தமிழக அரசியல் சூழலில், நா.த.க-வை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை என்ற ஆதங்கத்துடனும் குமுறலுடனும் நா.த.க-வின் சுயலாப அரசியலை சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மு.களஞ்சியம்

இந்தச் சூழலில், ‘தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் எங்களை விட்டால் யாருமில்லை’ என்ற இறுமாப்புடன், சுயலாப அரசியலை மேற்கொண்டு வருபவர்களுக்கு மத்தியில், உண்மையான தமிழ்த் தேசியக் கட்சியாக நாங்கள் களத்தில் நிற்போம்.”

“ஆனால், த.வெ.க-வில் இணைவதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் பலிக்காததையடுத்தே, தனிக்கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக சொல்கிறார்களே?”

“விமர்சிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இங்கே, திராவிடக் கட்சிகள் வீழ்த்த முடியாத எண்ணிக்கையில் உள்ளன. அதை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கான, உண்மையான தமிழ்த்தேசியத்தை கட்டமைக்க விரும்பும் தோழமைகளோடு ஏற்கெனவே திருச்சியில் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நாங்கள் நடத்தி முடித்துவிட்டோம். விரைவில் அடுத்த கூட்டத்தை சென்னையில் நடத்தவிருக்கிறோம். அப்போது உண்மையான தமிழ்த் தேசியர்கள் அனைவரும் எங்களோடு அணிவகுப்பார்கள்!

வெளிப்படையான நிதி நிர்வாகம், அனைவருக்குமான கருத்துரிமை, நல்லது, கெட்டது என அனைத்தையும் கலந்தாலோசித்து முடிவுக்கு வருவது என எங்கள் கட்சியில் ஜனநாயகம் இருக்கும். தனிநபர் ஆதிக்கத்துக்கு இங்கே எந்த இடமும் இல்லை.”

“நீங்கள் ஆரம்பிக்கப்போகும் புதிய கட்சியின் முக்கிய நோக்கம் என்ன? உங்கள் கட்சிக்கான ஆதரவு எந்தளவில் உள்ளது?”

“உலகளவிலான தமிழ் ஆர்வலர்கள் அனைவருமே எங்கள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கிறார்கள். எனது தலைமையின் கீழ், சே.முத்துப் பாண்டி, பென்னிகுயிக் பாலசிங்கம், டாக்டர் அருண்சின்னையா, புலவர் கிருஷ்ணகுமார், பாலமேடு பார்த்திபன், கனிமாறன், சேவியர் பெலிக்ஸ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் எங்கள் புதிய கட்சியைக் கட்டமைக்கப்போகிறார்கள். இதுவரை வேறு கட்சிகளில் பயணித்துவரும் தமிழார்வலர்களும்கூட, செப்டம்பர் இறுதியில் நாங்கள் புதிய கட்சியை அறிவிக்கும்போது எங்களுடன் இணைய காத்திருக்கிறார்கள்.”



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed