மெரினாவின் லுக்கே இப்போ வேற... இறுதிக்கட்டத்தை எட்டிய பணிகள்... என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..? | சென்னை செய்திகள்

இதனுடன் கலங்கரை விளக்கம் மற்றும் அண்ணா சதுக்கம் பகுதிகளிலும் அடுத்தடுத்த கட்டப் பணிகள் வேகமடைந்துள்ளதால், மெரினா கடற்கரையின் தோற்றமே மாற்றம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

சர்வதேச தரச்சான்று பெறும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த கடற்கரை மண்டலங்கள் ஒவ்வொன்றும் சுமார் 20 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை சார்ந்த பொருட்களையே பயன்படுத்தும் கொள்கை பின்பற்றப்படுகிறது.

கடற்கரையின் இயல்பான அழகை காக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் குடில்கள், ஓய்வெடுக்கும் இருக்கைகள், பொதுப் பயன்பாட்டு பெஞ்சுகள் உள்ளிட்ட வசதிகள் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களும் இந்தத் திட்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. கடலோரப் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கும் உயரமான கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், சுத்தம் மற்றும் கழிவுகள் மேலாண்மைக்காக நவீன குப்பை சேகரிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரைக்கு வரும் மக்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமான சூழலிலும் நேரத்தை செலவிடுவதற்கான அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

வழக்கமான கடற்கரை வசதிகளைத் தாண்டி, சமூக மற்றும் மனநலத்தை ஊக்குவிக்கும் அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அமைதியான சூழலில் தியானம் மேற்கொள்ளும் மையம், வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கான தனி அறை, புகைப்பட ஆர்வலர்களை கவரும் செல்ஃபி மையங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகளுடன், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறப்பு உபகரணங்கள் சேர்க்கப்பட்டிருப்பது இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

அனைவரையும் உள்ளடக்கும் பொதுவிடமாக கடற்கரையை மாற்றும் நோக்கில் பல்வேறு சமூகநல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனித்தனி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்காக பாலூட்டும் அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி அமைப்புகள், அவசர மருத்துவ உதவிக்கான முதலுதவி மையங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை பாதுகாக்கும் சேமிப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக சிறப்பு சக்கர நாற்காலிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நீலக்கொடி தரச்சான்றின் முக்கிய அடிப்படையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளும் தீவிரமாக அமல்படுத்தப்படுகின்றன. கடல்நீரின் தரம் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்படுவதோடு, கடலில் கலக்கும் கழிவுகளின் அளவை கணிசமாகக் குறைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கடல்சார் உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பது, பணியாளர்களின் நலன்களை உறுதி செய்வது, பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு தரநிலைகளும் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் சமீபத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். கோடை விடுமுறையால் அதிகரித்துள்ள மக்கள் வருகையை கருத்தில் கொண்டு, தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை இடையறாது மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மெரினா நீச்சல் குளத்தையும் பார்வையிட்ட அவர், நீரின் தரம், சுகாதார வசதிகள் மற்றும் பயன்பாட்டு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், மெரினா கடற்கரை சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையமாக மேலும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *